நீதியரசர்கள் பழி: மனைவி காட்டம்

| 01 May 2016

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் கட்டமைப்புரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட லோதா செயற்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக, இந்திய உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் போது, அச்சபையின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியாவை உதாரணமாகக் காட்டி, பிரதம நீதியரசர் டி.எஸ் தாகூர், நீதியரசர் இப்ராஹமிம் கலிபுல்லா ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு, டால்மியாவின் மனைவி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

 

லோதா செயற்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், செயலாளர் உட்பட முக்கிய பொறுப்பிலிருக்கும் அனைவருக்கும், அதிகபட்ச வயதாக 70 வயதை அறிவித்தல் காணப்படுகிறது. இதற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

 

இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை இடம்பெறும் போது, பிரதம நீதியரசரும் மற்றைய நீதியரசரும், அச்சபையின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியாவை உதாரணமாகக் காட்டியுள்ளனர். இரண்டாவது தடவையாக, மார்ச் 2015ஆம் ஆண்டில் பதவியேற்ற டால்மியா, அப்பதவியிலிருக்கும் போதே செப்டெம்பர் மாதத்தில் தனது 75ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.

 

'பேச முடியாத, தொடர்பாட முடியாத தலைவரொருவரை நீங்கள் கொண்டிருந்தீர்கள். அவரைத் தெரிவுசெய்தவர்கள், யாரைத் தெரிவுசெய்கிறார்கள் என்பதைப் பார்க்கவில்லையா? இந்த நாட்களில், அரசியலில் கூட ஓய்வுபெறுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளனர். அத்தோடு, 'பதவியில் ஏன் அவ்வளவு நீண்டகாலம் இருக்க வேண்டுமென்கிறீர்கள்? உச்சநீதிமன்ற நீதிபதிகள்கூட, 65 வயதில் ஓய்வுபெறுகிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கே கண்டனம் தெரிவித்துள்ள டால்மியாவின் மனைவி, இறந்த ஒருவரைப் பற்றித் தவறாக உரைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் எந்தவொரு நபரின் சான்றிதழும் டால்மியாவுக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

scroll to top