பாகிஸ்தான் சுப்பர் லீக்கால் $2.6 மில்லியன் இலாபம்

| 04 May 2016

 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடாத்தப்பட்ட இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரால், அந்த கிரிக்கெட் சபைக்கு, 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபமாகப் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறாத நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற இந்தத் தொடரில், 5 அணிகள் பங்குபற்றியிருந்தன. இந்நிலையிலேயே, 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிரிக்கெட் சபை இலாபமாகப் பெற்றதாகத் தெரிவித்த அந்த லீக்கின் தலைவர் நஜம் சேதி, அதை வரவேற்கத்தக்க விடயமெனத் தெரிவித்தார்.

 

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, மைதான நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மூலமாக மாத்திரம், 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வருமானமாக ஈட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தத் தொடரில் பங்குபற்றிய அணிகள், நட்டத்தை எதிர்கொண்டதன் காரணமாக, இலாபத்தில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அவ்வணிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், இதனால் 0.6 மில்லியன் அமெரிக்க டொலர்களே, கிரிக்கெட் சபைக்கு இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்புத் தொடர்பான அச்சம் காரணமாக, அங்கு சர்வதேசப் போட்டிகள் இடம்பெறுவது அரிதானது என்ற நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற இத்தொடரில், கிறிஸ் கெயில், டெரன் சமி, ஷேன் வொற்சன், கெவின் பீற்றர்சன், ஷகிப் அல் ஹசன், லூக் ரைட் போன்ற பிரபலமான வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

scroll to top