மீண்டும் வருகிறார் பற் கமின்ஸ்

| 10 May 2016

 

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பற் கமின்ஸ், நீண்டகாலத்துக்குப் பின்னர், தொழில்முறைக் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்குபற்றவுள்ளார். அவுஸ்திரேலிய 'ஏ" சார்பான போட்டியிலேயே அவர் பங்குபற்றவுள்ளார்.

 

அவுஸ்திரேலியாவின் எதிர்காலத்துக்கான சிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட பற் கமின்ஸ், தொடர்ச்சியாகக் காயங்களுக்கு உள்ளாகி வருவதன் காரணமாக, 5 ஆண்டுகளில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் 18 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 15 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் மாத்திரம் பங்குபற்றியுள்ளார்.

 

இறுதியாக, கடந்தாண்டு செப்டெம்பரில் அவருக்கு வழமையாக ஏற்படும் முதுகு உபாதை காரணமாக அவுஸ்திரேலியக் குழாமிலிருந்து வெளியேற்றப்பட்ட பற் கமின்ஸ், தனது உபாதையிலிருந்து குணமடைந்து வந்ததோடு, தனது உடல் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

 

தற்போது 23 வயதான பற் கமின்ஸ், அவஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளவர்களால், உயர்ந்தளவில் மதிக்கப்படுவதன் காரணமாக, அவருக்குத் தேவையான காலத்தை வழங்கி, அவரது உடல் வலிமைப்படுத்தலில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

 

இந்நிலையிலேயே, தென்னாபிரிக்க 'ஏ" அணிக்கெதிராக ஜூலை 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தொடருக்காக, அவுஸ்திரேலிய 'ஏ" குழாமில், பற் கமின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பற் கமின்ஸ் தவிர, அலெக்ஸ் றொஸ், ட்ரவிஸ் டீன், அவுஸ்திரேலியப் பயிற்றுநர் டெரன் லீமனின் மகனான ஜேக் லீமன் ஆகியோரும், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

scroll to top