சம்பியனானது றெயின்போ

| 18 July 2016

 

வல்வைக்குட்பட்ட றெயின்போ, தீருவில், சைனிங்ஸ், இளங்கதிர், நேதாஜி, உதயசூரியன், ரேவடி ஆகிய ஏழு கழகங்களுக்கிடையில், அமரர்களான கந்தசாமி குகதாஸ், குகதாஸ் ஜெயலட்சுமி, குகதாஸ் பார்த்தீபன் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம், லீக் முறையில் நடாத்திய இருபதுக்கு-20 தொடரில் றெயின்போ விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது.

 

றெயின்போ விளையாட்டுக் கழகத்துக்கும் தீருவில் விளையாட்டுக் கழகத்துமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தீருவில் விளையாட்டுக் கழகம், 17 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரதீப் 23 ஓட்டங்களைப் பெற்றதோடு, பந்துவீச்சில் ருதேஷா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு 63 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய றெயின்போ விளையாடுக் கழகம், 14 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பிரணவன் 21, பிரகலாதன் 12 ஓட்டங்களைப் பெற்றதோடு, பந்துவீச்சில் பிரதீப், குமரன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

இறுதிப் போட்டியின் நாயகனாக ருதேஷா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக பிரதீப் தெரிவானார். தொடரில், 163 ஓட்டங்களைப் பெற்று பிரதீப் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றதோடு, 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தொடரில் அதிக விக்கெட்டுகளை சிறீகரன் கைப்பற்றியிருந்தார்.

 

லீக் முறையில் இடம்பெற்ற இத்தொடரின் லீக் போட்டிகள் ஆறிலும் வெற்றி பெற்று முதலாவது அணியாக ‘பிளே ஓஃப்’ சுற்றுக்குள் நுழைந்த றெயின்போ விளையாட்டுக் கழகம், லீக் போட்டிகள் நான்கில் வெற்றி பெற்று இரண்டாமிடம் பெற்ற தீருவில் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தததுடன், தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற சைனிங்ஸ், தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இளங்கதிர் ஆகியன மோதிய போட்டியில் வெற்றி பெற்ற சைனிங்ஸ், தீருவில் ஆகிய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியைத் தேர்வு செய்யும் போட்டியில், தீருவில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

scroll to top