ஓய்ந்தது டில்ஸ்கூப்

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா | 12 September 2016

 

இலங்கை சார்பாக கிரிக்கெட் விளையாடி, ஜாம்பவான்களாகக் கருதப்படுவோர் என்ற பட்டியலொன்று வாசிக்கப்படுமாயின், முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய என்ற பெயர்கள், நிச்சயமாகப் பேசப்படும் பெயர்களாகும். அதேபோல், சமிந்த வாஸ், லசித் மலிங்க, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம என, வேறு சில பெயர்களும் முன்வைக்கப்படும். ஆனால், திலகரட்ண டில்ஷான் என்ற பெயர், அடிக்கடி அடிபடும் ஒன்று கிடையாது.

 

ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கை சார்பாகத் தோன்றிய, இரண்டாவது மிகப்பெரிய வீரராக, திலகரட்ண டில்ஷான் கருதப்பட முடியும் என்ற ஒரு கருத்தோடு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து டில்ஷானின் ஓய்வைப் பற்றி ஆராய முற்படுகிறது இக்கட்டுரை.

 

1976ஆம் ஆண்டு பிறந்த டில்ஷான், 1999ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தனது 23ஆவது வயதில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரராகவே அவரது அறிமுகம் அமைந்தது.

 

சிம்பாப்வே அணிக்கெதிராக, மழை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியிலே தனது அறிமுகத்தை மேற்கொண்ட அவர், ஒரே ஓர் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி, 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். பந்துவீசியிருக்கவில்லை. அதே சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியிலேயே தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷான், 6ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி, 53 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, 14.5 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியிருந்த போது மழை குறுக்கிட, போட்டி கைவிடப்பட்டது.  இவ்வாறு, அவரது அறிமுகப் போட்டிகள் இரண்டுமே, மழையினால் குழப்பப்பட்ட போட்டிகளாக அமைந்தன.

 

ஆனால், தொடர்ந்தும் மத்திய வரிசையில், நிதானமான துடுப்பாட்டத்தை அவர் புரிந்துகொண்டார். குறிப்பாக, ரசல் ஆர்னல்டுடனான இணைப்பாட்டங்கள், அவரது ஆரம்பகட்ட வாழ்வில் முக்கியமானவை. டில்ஷானும் ஆர்னல்டும் இணைந்து, 77 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தனர். அதில், 27 இனிங்ஸ்களில் இருவரும் இணைந்து, இணைப்பாட்டமொன்றைப் புரிந்திருந்தனர். அவர்களது இணைப்பாட்டச் சராசரி, 40.47 ஆகும். டில்ஷான், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்காத சந்தர்ப்பங்களில், அவருடைய சிறப்பான இணைப்பாட்டப் பெறுபேறாக, ஆர்னல்டுடனான இணைப்பாட்டங்களே அமைந்திருந்தன.

 

இவ்வாறு ஓரளவு சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வந்தாலும், இடையில் போர்ம் இல்லாது போக, அணியிலிருந்து நீக்கப்பட்டார் டில்ஷான். அதுவே அவருக்கான திருப்புமுனையாக அமைந்துபோனது. அதைத் தொடர்ந்து, அப்போதைய தலைவரான மஹேல ஜெயவர்தனவிடம், அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கப் போவதாக, டில்ஷான் கேட்டுக் கொண்டார். அந்த வாய்ப்பு வழங்கப்பட, 2008ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி, சர்வதேசப் போட்டிகளில் முதன்முறையாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார்.

 

இந்தியாவுக்கெதிராக கன்பெராவில் இடம்பெற்ற அப்போட்டியில், 59 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்ற டில்ஷான், அப்போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் இலங்கை அணிக்கு இலகுவான வெற்றி கிடைப்பதற்கு வழிவகுத்தார். போட்டியின் நாயகனாகவும் தெரிவானார். அதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கத் தொடங்கிய டில்ஷானின் கிரிக்கெட் வாழ்வு, முழுவதுமாக மாறிப் போனது.

 

அதுவரை காலமும், 133 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, ஒரு சதம், 10 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 29.47 என்ற சராசரியில் 2,594 ஓட்டங்களைப் பெற்றிருந்த டில்ஷான், அடுத்த 179 போட்டிகளில், 21 சதங்கள், 34 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 46.04 என்ற சராசரியில் 7,367 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் அதுவரை 55 போட்டிகளில் 8 சதங்கள், 12 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 3,166 ஓட்டங்களைப் பெற்றிருந்த டில்ஷான், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய 29 போட்டிகளில், 8 சதங்களையும் 10 அரைச்சதங்களையும் பெற்றிருந்தார்.

 

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 80 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக விளையாடினாலும், 66 போட்டிகளிலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார். மத்திய வரிசையில் களமிறங்கிய 14 போட்டிகளிலும், சதத்தையோ அல்லது அரைச்சதத்தையோ அவர் பெற்றதில்லை. மாறாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய 66 போட்டிகளில், ஒரு சதத்தையும் 13 அரைச்சதங்களையும் பெற்றார்.

 

ஆனால், டில்ஷானின் பங்களிப்பு, வெறுமனே இலக்கங்களையும் தரவுகளையும் வைத்து மாத்திரம் கணிப்பிடக்கூடியதன்று. மத்திய வரிசையில் அவர் துடுப்பெடுத்தாடிய போது, அவர் களமிறங்கிய சூழ்நிலைகள் குறித்து எவ்வாறு கவனம் செலுத்தப்பட்டதோ, அவரது கிரிக்கெட் வாழ்வும் அவ்வாறு கருதப்பட வேண்டியதொன்று.

 

குறிப்பாக, அணித்தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு வேறு எவரும் தயாராக இருந்திருக்காத நிலையில், அணித்தலைமைப் பொறுப்புக்குப் பொருத்தமானவர் என்று எவருமே கருதியிருக்காத டில்ஷான், அணிக்காக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில், வித்தியாசமான பாணியிலான தாடியையும் சிகை அலங்காரத்தையும் கொண்டிருந்த டில்ஷான், அணித்தலைவராக அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே அணிக்காக, தன்னை மாற்றிக் கொண்டார்.

 

அவரது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவருடைய தாடியும் சிகை அலங்காரமும் பெருமளவுக்கு மாறியது. தாடியும் சிகை அலங்காரமும் மாறினால் மாத்திரம், அணித்தலைமைக்காக அவர் முயல்கிறார் என்ற அர்த்தம் கிடையாது. ஆனால், அதுவரை காலமும் ஏனையோரின் கருத்துகள் தொடர்பாகக் கரிசனை செலுத்தாது, தனக்கு விரும்பிய பாணியில் இருந்து வந்த ஒருவர், நாட்டின் கிரிக்கெட் அணியின் தலைவர் என்ற உயர் பொறுப்பு வழங்கப்பட்டதும், அதற்காகத் தன்னை மாற்றிக் கொள்வதற்கு முயன்றார் என்பது, அந்தப் பணியை எவ்வளவு உயர்வாக எடுத்தார் என்பதை வெளிக்காட்டியது.

 

இலங்கை கிரிக்கெட் சபையில் அப்போது காணப்பட்ட குழறுபடிகள் காரணமாக, அப்போதைய தலைவரான குமார் சங்கக்கார, தனது பதவியிலிருந்து விலகியிருந்தார் என்ற பேச்சுக் காணப்பட்டது. அவருக்கு முன்னர் தலைவராக இருந்த மஹேலவுக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையிலும் முரண்பாடுகள் காணப்பட்டன. இருவரும் பதவி விலகிய பின்னரே, அணித்தலைமைப் பதவி, டில்ஷானின் மீது திணிக்கப்பட்டிருந்தது.

 

இவ்வாறு, அணிக்காக விளையாடிய டில்ஷான், அந்தப் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். ஆம், டில்ஷானின் தலைமையில் 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் தான் இலங்கை வென்றது. ஆனால், 5 போட்டிகளில் வெற்றி - தோல்வியற்ற முடிவு கிடைத்தது. அந்த 11 போட்டிகளில் 8 போட்டிகள், இலங்கைக்கு வெளியே நடந்தவை. கிடைத்த அந்த வெற்றி, தென்னாபிரிக்க மண்ணில் வைத்து இலங்கை பெற்ற முதலாவது டெஸ்ட் வெற்றி. அணித்தலைவராக அவரது இரண்டாவது போட்டியில், 193 ஓட்டங்களைக் குவித்தாரே டில்ஷான்?
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 21 போட்டிகளில் 8இல் வெற்றியும், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி கிடைத்தது.

 

டில்ஷானின் காலத்தில் இன்னும் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் முரளியின் இறுதிக் காலம் அது. அதேபோல், மத்தியூஸின் உபாதை, அஜந்த மென்டிஸின் உபாதைகள், போர்ம் இழப்பு என, டில்ஷானுக்கு எதிராகவே அனைத்துமே காணப்பட்டன. இவ்வாறு, அவரது தலைமைத்துவத்தில், ஏராளமான சவால்களுக்கு மத்தியிலேயே, அவர் பணியாற்றினார்.

 

இவற்றையெல்லாம் சொல்வதால் மாத்திரம், டில்ஷான் மீது விமர்சனங்களே இல்லையென்று ஆகிவிடாது. 2010ஆம் ஆண்டில் சிம்பாப்வேக்குச் சென்றிருந்த போது, இரவு விடுதியொன்றில் தவறாக நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விரேந்தர் செவாக், 99 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, அவரது சதத்தை இல்லாது செய்வதற்காக, முறையற்ற பந்தை வீசுமாறு சுராஜ் ரந்தீவுக்குச் சொன்னவரும் இதே
டில்ஷான் தான். அவ்வப்போது, மோசமான துடுப்பாட்டப் பிரயோகங்களை மேற்கொள்பவரும் அவர் தான்.

 

ஆனால், இலங்கை கிரிக்கெட்டுக்கு டில்ஷான் மேற்கொண்ட பங்களிப்புகள், கொஞ்ச நஞ்சம் கிடையாது. மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அவரை, பந்துவீசுமாறு கேட்டார்கள் - செய்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்குமாறு கேட்டார்கள் - செய்தார். அணித்தலைவராகப் பதவியேற்பதற்கு யாருமே இல்லாத போது, அப்பதவியை ஏற்குமாறு சொன்னார்கள் - செய்தார். பதவியிலிருந்து விலகுமாறு சொன்னார்கள் - செய்தார். விக்கெட் காப்பில் ஈடுபடுமாறு சொன்னார்கள் - செய்தார். ஆரம்பப் பந்துவீச்சாளராகச் செயற்படுமாறு சொன்னார்கள் - செய்தார். பொய்ன்ட் திசையில் களத்தடுப்பில் ஈடுபடுபவரை, எல்லைக் கோட்டில் களத்தடுப்பில் ஈடுபடுமாறு சொன்னார்கள் - செய்தார்.

 

இவ்வாறு, அணிக்காகவே தன்னை மாற்றிக் கொண்ட முக்கியமான வீரரொருவர், தற்போது ஓய்வுபெற்றுச் சென்றிருக்கிறார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த 4ஆவது இலங்கையர் அவர். ஆனால், அந்தப் பட்டியலில் அதிக சராசரியைக் கொண்ட இரண்டாவது இலங்கையர். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில், 13,430 ஓட்டங்கள், 323 விக்கெட்டுகளுடன், இலங்கையின் தலைசிறந்த வீரராக, சனத் ஜெயசூரியவே எப்போதும் இருப்பார். ஆனால், 10,290 ஓட்டங்கள், 106 விக்கெட்டுகள், 123 பிடிகள், களத்தடுப்பில் தடுக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஓட்டங்கள் என, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கைக்காக விளையாடிய இரண்டாவது முக்கிய வீரராகவே அவரே இருப்பார் என்பது, இக்கட்டுரையாளரின் கருத்து.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முரளிதரன் (534 விக்கெட்டுகள்), இரண்டாவது அதிக எண்ணிக்கையான ஓட்டங்களைக் கொண்டுள்ள குமார் சங்கக்கார (14,234) ஆகியோரைத் தாண்டி, இந்த இடத்துக்கு டில்ஷான் பொருத்தமானவர் என்ற வாதம் முன்வைக்கப்படுவதே, டில்ஷானின் தனிச்சிறப்பைக் காட்டுகிறது.

 

தனது பெயரில், கிரிக்கெட்டின் துடுப்பாட்டப் பிரயோகம் ஒன்றின் பெயரைக் (டில்ஸ்கூப்) கொண்ட ஒரேயொரு வீரராக டில்ஷானே இருப்பார் எனக் கருதப்படும் நிலையில், அவரது பெயர், வரலாறு தாண்டி நிலைத்து நிற்குமென்பதே, அனைவரதும் கருத்தும் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

 

டில்ஷானின் இறுதி சர்வதேசப் போட்டியில், துடுப்பாட்டத்தில் சறுக்கிய அவர், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இலங்கைக்கு வெற்றி கிடைக்கக்கூடுமென்ற நிலையை ஏற்படுத்தி, இன்றுவரை, போட்டிகளின் முடிவுகளை மாற்றக்கூடிய சகலதுறைத் திறமை, தன்னிடமிருந்து மங்கிவிடவில்லை என்பதை நிரூபித்தார்.

 

அதன்போது, அங்கு பார்வையாளராக இருந்த பெண்ணொருவர் ஏந்தியிருந்த பதாகை, டில்ஷானை எவ்வளவு தூரம், இலங்கையின் இரசிகர்கள் இழந்து நிற்கிறார்கள் என்பதைக் காட்டியது. "என்னுடைய முன்னாள் காதலனை விட, டில்ஷானை நான் அதிகம் இழந்துநிற்பேன்” என்று அந்தப் பதாகை தெரிவித்தது. இலங்கையின் இரசிகர்கள் பலரும், ‘எங்களுக்கும் அவ்வாறே” என்று சொல்வதைத் தான் கேட்க முடிந்தது.

 

scroll to top