எங்கே செல்கிறது கிரிக்கெட் சபை?

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா | 23 October 2016

 

அண்மைய சில நாட்களாக, இலங்கை கிரிக்கெட் சபை பற்றி வெளியாகிவரும் செய்திகள், பெருமளவில் நன்மைதரக் கூடியனவாக இருக்கவில்லை. கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், மஹேல ஜெயவர்தனவின் அறக்கட்டளைக்கான நடைபயணத்துக்கு ஆதரவளிக்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, சர்ச்சைக்குரிய விதத்தில், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையால் வெளியிடப்பட்ட பிரத்தியேகமான செய்தியின்படி, இலங்கை கிரிக்கெட் சபையில் பணிபுரிந்த பெண் ஊழியரொருவர், கிரிக்கெட் சபையில் நிலவுவதாகக் கூறப்படும் பாலியல் கலாசாரம் பற்றிய விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார், காயத்திரி விக்கிரமசிங்க என்ற அந்த முன்னாள் ஊழியர்.

 

பாலியல் ரீதியாக வசைகளுக்கு உள்ளானதாகத் தெரிவித்த அவர், ஒரு கட்டத்தில் உடல்ரீதியான தொல்லைகளுக்கும் உள்ளானதாகக் குற்றஞ்சாட்டினார். அதைவிட, தனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமைக்கு, பாலியல் கோரிக்கைகளுக்கு இணங்காமையே காரணம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

அவரது இந்தக் குற்றச்சாட்டுகள், இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதால், கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சிந்தித்தாலும், இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் காணப்பட்டன என்பது, நம்பிக்கை வைக்கவிடாமல் செய்கிறது. இலங்கை அணியின் வீராங்கனைகள் மீது, இவ்வாறான பாலியல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் காணப்பட்டு, அவை நிரூபிக்கப்பட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்தது. ஆகவே, இன்னும் எவ்வளவு அழுக்குகள், வெளிச்சத்துக்கு வருமென்பது தான் தெரியவில்லை.

 

இது இவ்வாறிருக்க, காலியில் புற்றுநோய் வைத்தியசாலைப் பிரிவு ஒன்றை அமைப்பதற்காக நிதிசேர்ப்பதற்கு, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன மேற்கொண்டுவரும், வடக்கிலிருந்து தெற்குக்கான நடைபயணத்தின் பிற்பகுதி, கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் வரவுள்ளது. அதில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும் இணைந்து கொள்ள வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த நடைபயணத்துக்கு, உத்தியோகபூர்வமாக ஆதரவு தெரிவிப்பதற்கான இக்கோரிக்கையை, இலங்கை கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது. இந்தப் பயணத்தில், முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவும் அதிகளவில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மதிப்பளித்து, இந்தக் கோரிக்கையை, அச்சபை கையாண்டிருக்கலாம். ஆனால், ஜெயவர்தன மீது சபைக்குக் காணப்படும் வெறுப்புக் காரணமாகவே, இந்தக் கோரிக்கை, நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

 

மூன்றாவதாக, இலங்கை வீரர்களுக்கான ஒப்பந்தம், மலையக மக்களுக்கான கூட்டொப்பந்தம் போலவே, நீண்டகால இழுபறிக்குப் பின்னர், கடந்த வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டிருந்தது. அஞ்சலோ மத்தியூஸ், ரங்கன ஹேரத், டினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன, குசால் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான்ன, டில்ருவான் பெரேரா, குசால் மென்டிஸ், மிலிந்த சிரிவர்தன, நுவான் பிரதீப், கௌஷால் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, ஜெப்றி வன்டர்சே, லக்‌ஷான் சந்தகன் ஆகியோருக்கு, இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில், தம்மிக்க பிரசாத் என்ற பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

 

தம்மிக்க பிரசாத்தை, கிரிக்கெட் சபை வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால், கடந்தாண்டில் இலங்கைக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரை, இரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 24.95 என்ற சராசரியில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கூட, 10 போட்டிகளில் 37 விக்கெட்டுகளையே வீழ்த்தியிருந்தார்.
இவ்வாண்டில் தோட்பட்டை உபாதை காரணமாகப் பாதிக்கப்பட்டு, சத்திரசிகிச்சை மேற்கொண்ட பிரசாத், இவ்வாண்டில் போட்டிகள் எவற்றிலும் விளையாடியிருக்கவில்லை. ஆனால், கடந்தாண்டில் அவர் வெளிப்படுத்திய திறமைகள், அவருக்கென்று ஒப்பந்தம் கிடைப்பதை உறுதி செய்திருக்க வேண்டாமா? இல்லை, இவ்வாண்டில் விளையாடி, திறமைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றால், இவ்வாண்டில் 9 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றி, 10.30 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்ற லஹிரு திரிமான்னவுக்கு, எதன் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது? அண்மைக்காலத்தில், உள்ளூர்ப் போட்டிகளில் கூட அவர் ஒன்றும் வெளுத்து வாங்கவில்லை. 2, 27, 3, 4, 2, 21... இவை தான், அவரது இறுதி 6 இனிங்ஸ்களில் பெறப்பட்ட ஓட்டங்கள்.

 

நாட்டுக்காக விளையாடி, அதன் மூலம் காயத்தை ஏற்படுத்திக் கொண்ட வீரரொருவரை, இலங்கை கைவிடுதொன்றும் இது முதற்தடவையன்று. இதற்கு முன்னர், லசித் மலிங்கவுக்கு உபாதை ஏற்பட்டபோதும், அவரது ஒப்பந்தத்தை நிறுத்தி, அவரது மருத்துவ செலவுகளை அவரே ஏற்கும்படி வைத்தது தான் இச்சபை.
ஆக, இந்த 3 விடயங்களுமே, இலங்கை கிரிக்கெட் சபை, எந்தப் பாதையில் பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்பிச் செல்கின்றன. பதில் சொல்லத் தான் எவருமில்லை.

scroll to top