பாகிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

ச.விமல் | 30 November 2016

 

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என வெள்ளையடிப்புச் செய்து வெற்றி பெற்றுள்ளது. அண்மைக்காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக செயற்பட்டு வந்த பாகிஸ்தான் அணி திடீரென மிக மோசமாக தோல்வியடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் முதலிடத்திலிருந்த அணி இந்தத் தொடரின் பின்னர் நான்காமிடத்திலுள்ளது. பாகிஸ்தான் அணி, இலங்கையில் வைத்து 2014ஆம் ஆண்டு தோல்வியடைந்த பின்னர் தற்போதே தொடர் ஒன்றில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

 

இங்கிலாந்தில் வைத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அவ்வளவு பலமில்லாத நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ளமை ஆச்சரியமே. நியூசிலாந்து அணிக்கு இது ஒரு நல்ல மீள் வருகை தொடர். கடந்த வருடம் இலங்கை அணியை தமது நாட்டில் வெற்றி பெற்ற பின்னர் நியூசிலாந்து அணி முக்கிய அணியுடனான தொடரை வென்றுள்ளது. அவுஸ்திரேலியா அணியுடன் சொந்த நாட்டில் தோல்வி. அதன்பின்னர் தொடர்ந்து வெளிநாட்டுத் தொடர்கள். சிம்பாப்வே அணியுடன் மாத்திரமே வெற்றி பெறமுடிந்தது.

 

பாகிஸ்தான் அணியை 32 வருடங்களின் பின்னர் தொடர் ஒன்றில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது. தங்கள் சொந்த நாட்டில் வைத்து 84ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை வென்ற பின்னர் தற்போதே நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு தொடர்களுக்கும் இடையே 10 தொடர்கள் நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளன. இவற்றில் 7 தொடர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்தளவுக்கு பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அந்த ஆதிக்கத்துக்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.

 

இரு அணிகளுக்குமிடையில் 55ஆம் ஆண்டு ஆரம்பித்த டெஸ்ட் தொடர்களில், மூன்றில் மட்டுமே நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 22 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளன.  இவற்றில் 6 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தான் அணி 13 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமிடையில் நியூசிலாந்தில் நடைபெற்ற 31 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 10 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 14 போட்டிகள் சமநிலையில் நிறைவைடைந்துள்ளன. 55 போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதியுள்ளன. 24 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 10 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன. 21 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன.

 

மிகப் பலமாக நியூசிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி வெற்றி கொண்டது மிகப்பெரிய விடயமே. எப்போதும் ஆச்சரியப்பபடவும், அதிர்ச்சியடையவும் வைக்கும் அணி பாகிஸ்தான் அணியே. இந்தத் தொடரிலும் அதுதான் நடந்திருக்கின்றது. மிக அபாரமாக வெற்றிகளை அள்ளிக்குவிக்க ஆரம்பித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பு இருக்க மீண்டும் பழைய நிலைக்கு அணி சென்றுவிட்டது.

 

இந்தத் தொடர் முழுக்க முழுக்க பந்து வீச்சாளர்களுக்கு சாதகத் தன்மையைத் தந்துள்ளது. பாகிஸ்தான் அணியிலும் பார்க்க நியூசிலாந்து அணிக்குப் பந்து வீச்சுப் பலம் அதிகம். அந்த வித்தியாசமே இந்தத் தொடரின் வெற்றியை தீர்மானித்துள்ளது. 80 விக்கெட்டுகளில் 67 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில் 40 விக்கெட்டுகள் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள். துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாக ஓட்டங்களை பெற முடியவில்லை. நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற ஓட்டங்களே அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது. முதற்போட்டியின் நான்காம் இனிங்ஸிலும், இரண்டாவது போட்டியின் மூன்றாம் இனிங்ஸிலும் நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டனர். இந்த இரண்டு இனிங்ஸிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களினால் சிறப்பாகச் செயற்பட்டு நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை தகர்க்க முடியவில்லை.

 

வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். குறிப்பாக, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு மிக சிறப்பாக அமைந்தது. அவர்கள் விக்கெட்டுகளை அள்ளி எடுக்க, பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் போதியளவு ஓட்டங்களை எடுக்க இயலவில்லை. அண்மைக்காலமாக ஓட்டங்களை அள்ளிக் குவித்து வந்த யுனிஸ்ஸ் கான் கூட ஓட்டங்களைப் பெற முடியாமல் தடுமாறிப்போனார். முதற் போட்டியில் விளையாடிய மிஸ்பா உல் ஹக் கூட தடுமாறிப்போனார்.

 

இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு வீரர்களுக்கு அறிமுகத்தை வழங்கியது. இவர்கள் இருவருமே இந்தத் தொடர் வெற்றியில் முக்கிய பங்கு எடுத்துள்ளனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மார்ட்டின் கப்திலுக்குப் பதிலாக சேர்த்துக்கொள்ளபப்ட்ட ஜீட் றாவல் மூன்று அரைச்சதங்களைப் பெற்றார். கொலின் டி கிறான்ட்ஹொம், முதலாவது இனிங்ஸிலேயே ஆறு விக்கெட்களைக் கைப்பற்றியதோடு, போட்டியின் நாயகன் விருதையும் தனதாக்கினார்.  துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நியூசிலாந்து அணிக்கு சகலதுறை வீரர் ஒருவர் மீண்டும் கிடைத்துளார் எனக்கூறலாம்.  றொஸ் டெய்லர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார். டிம் சௌதியின் பந்து வீச்சு பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை அள்ளி எடுத்துக்கொண்டது. 13 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிக் கொண்டார்.

 

ஏழாமிடத்திலிருந்த  நியூசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் ஒரு இடம் முன்னோக்கி வந்துள்ளது. ஆனாலும் இந்த முன்னேற்றம் மற்றைய அணிகளுடன் ஓரளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் ஒரு தொடர் வெற்றி இன்னமும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை தரலாம். ஆனால் பாகிஸ்தான் அணி முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்து அணியுடனான தொடரை இந்தியா அணி வெற்றி பெற்ற போது முதலிடத்தை இழந்தது. ஆனால் தற்போது நான்காமிடத்திலுள்ளது.

 

இந்த தொடர் முடிவில் தரப்படுத்தல்

 

1              இந்தியா                            29                           3328                      115

2              இங்கிலாந்து                     44                           4631                       105

3              அவுஸ்திரேலியா             40                           4189                      105

4              பாகிஸ்தான்                      32                           3274                      102

5              தென்னாபிரிக்கா               29                           2944                      102

6              நியூசிலாந்து                      38                           3666                       96

7              இலங்கை                          35                           3370                        96

8              மேற்கிந்தியத் தீவுகள்      30                           2077                        69

9              பங்களாதேஷ்                   15                             978                          65

10           சிம்பாப்வே                         10                              48                            5

 

தொடரில் 100 ஓட்டங்களை தாண்டியவர்கள்

 

றொஸ் டெய்லர்                   2              3              150         102*      75.00     81.08     1              0             

ஜீட் றாவல்                            2              4              148         55           49.33     42.89     0              2             

பாபர் அஸாம்                       2              4              142         90*         47.33     46.10     0              1             

ஷமி அஸ்லாம்                    2              4              122         91           30.50     33.79     0              1             

கேன் வில்லியம்சன்            2              4              120         61           30.00     54.05     0              1             

அஸார் அலி                         2              4              105         58           26.25     26.85     0              1             

 

தொடரில் 5 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்.

 

டிம் சௌதி                          2              4              87.4        213         13           6/80       8/140     16.38     2.42       

டி கிறான்ட்ஹொம்            2              4              50.5        110         9              6/41       7/64       12.22     2.16       

நீல் வக்னர்                         2            4              59.1        163         9              3/34       6/116     18.11     2.75       

மொஹமட் ஆமிர்             2              4              66.0        200         7              3/43       4/55       28.57     3.03       

சொஹைல் கான்               2              4              70.0        267         7              4/99       4/168     38.14     3.81       

இம்ரான் கான்                    1              2              41.1        128         6              3/52       6/128     21.33     3.10       

ட்ரெண்ட் போல்ட்               1           2              33.0        76           5              3/37       5/76       15.20     2.30       

scroll to top