'உடற்றகுதியில் 100% நம்பிக்கை'

| 13 December 2016

 

தனது உடற்றகுதியில் 100 சதவீதம் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில், அதிகமாகப் பந்துவீச எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டிசெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இத்தொடருக்கான இலங்கைக் குழாம், இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அதற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அண்மைக்காலமாக உபாதைகளால் அவதிப்பட்ட மத்தியூஸ், சிம்பாப்வே டெஸ்ட் தொடர், முத்தரப்புத் தொடர் உள்ளிட்ட தொடர்களையும் தவறவிட்டிருந்தார். இந்நிலையிலேயே, தான் முழுமையான உடற்றகுதியை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

"தென்னாபிரிக்காவில், அதிகமாகப் பந்துவீச நான் எதிர்பார்க்கிறேன். அண்மையில சில ஆண்டுகளைப் போன்று, என்னால் அதிகமாகப் பந்துவீச முடியுமாயின், அணிக்கு நான் அதிக பங்களிப்பை வழங்க முடியும்" என்று தெரிவித்த மத்தியூஸ், "ஆசிய நிலைமைகளில், நான் அதிகமாகப் பந்துவீசவில்லை. ஆனால் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து எனில், பந்து அதிகமாக ஸ்விங் செய்யக்கூடியது. அங்கு, நான் அதிகமாகப் பந்துவீச வேண்டியிருக்கும்" என்றார்.

 

தனது அண்மைக்கால உடற்றகுதிப் பிரச்சினைகளுக்கு, பந்துவீசுவது காரணமன்று எனத் தெரிவித்த மத்தியூஸ், அதிக போட்டிகளில் விளையாடியமை, அதற்கான காரணமாக இருக்கக்கூடுமெனத் தெரிவித்தார். "கடந்த 4 ஆண்டுகளைப் பார்த்தீர்களானால், உலகில் அதிக அளவிலான கிரிக்கெட் விளையாடியவராக நான் உள்ளேன் எனச் சொல்லப்பட்டிருக்கிறது" என அவர் கூறினார்.

scroll to top