நாளை ஆரம்பிக்கிறது தொடர்

| 25 December 2016

 

பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. கிறைஸ்ட்சேர்ச்சில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கிறது.

 

அயல் நாடான அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சப்பல்-ஹட்லி தொடரில், அவுஸ்திரேலியாவால் நியூசிலாந்து அணி வெள்ளை -யடிக்கப்பட்டபோதும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில், பங்களாதேஷை நியூசிலாந்து அணி வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக 27 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்தில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, 21 போட்டிகள் வெற்றிபெற்றுள்ளது. எவ்வாறெனினும், பங்களாதேஷும், நியூசிலாந்தும் இறுதியாக 2013ஆம் ஆண்டு சந்தித்துக்கொண்டபோது, நியூசிலாந்தை பங்களாதேஷ் வெள்ளையடுத்திருந்தது.

 

மறுபக்கம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆபத்தான அணியாக இருக்கும் பங்களாதேஷுக்கு, தமது சொந்த மண்ணில் இருக்கும் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களைப் போலல்லாது, பந்து ஸ்விங் நியூசிலாந்து ஆடுகளங்கள் சவாலை வழங்கும்.

 

எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்தபிசூர் ரஹ்மான், உபாதையிலிருந்து குணமடைந்து அணிக்கு திருபியுள்ளமை பங்களாதேஷுக்கு பலத்தை அளிக்கும். தவிர, அணித்தலைவர் மஷ்ரபி மோட்டசா, தஸ்கின் அஹமட் பங்களாதேஷுக்கு கூடுதல் பலம். 

 

நியூசிலாந்து அணியில் சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லர் இல்லாதபோதும், அனுபவ வீரர் நீல் ப்றூம் உள்வாங்கப்பட்டுள்ளமை பலத்தை வழங்கும். விக்கெட் காப்பாளராக மீண்டும் உள்ளே வந்துள்ள லுக் ரொங்கியும் வேகமாக ஓட்டங்களைப் பெறுவார். 

 

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: மார்ட்டின் கப்தில், டொம் லேதம், கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), நீல் ப்றூம், கொலின் மன்றோ, லுக் றொங்கி (விக்கெட் காப்பாளர்), கொலின் டி கிரான்ட்ஹொம், மிற்சல் சந்தர், டிம் சௌதி, லொக்கி பெர்கியூசன்

 

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி: தமீம் இக்பால், இம்ருல் கைஸ், சபீர் ரஹ்மான், முஷ்பிகூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), ஷகிப் அல் ஹஸன், மஹ்முதுல்லா, மொசாதிக் ஹொஸைன், தன்பீர் ஹைதர், மஷ்ரபி மோட்டசா, முஸ்தபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹமட்

scroll to top