நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது போட்டி

| 25 December 2016

 

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஐந்து மணிக்கு மெல்பேர்ணில் ஆரம்பமாகிறது.

 

பிறிஸ்பேர்ணில் இடம்பெற்ற மென்சிவப்பு பகலிரவு டெஸ்ட் போட்டியில், வெற்றியின் இறுதி வரை வந்து பாகிஸ்தான் அணி தோற்றிருந்த நிலையிலேயே, இப்போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பகலிரவு டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் அதிகப்படியான ஓவர்களை வீசியிருந்த நிலையிலில்‌, இப்போட்டியில் அவர்களால் முழுமையாக 100 சதவீதத்துடன் பெறுபேறுகளை வழங்கமுடியுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

 

எவ்வாறெனினும் மேற்படி சந்தேகம் அவுஸ்திரேலிய தேர்வாளர்களுக்கு இருந்திருக்கவில்லை. 12ஆவது வீரராக சேர்க்கப்பட்டிருந்த வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் ஹில்டன் கார்ட்ரைட்டை குழாமிலிருந்து விடுவித்துள்ளனர். முதலாவது போட்டியில் பங்கேற்ற அதே அவுஸ்திரேலிய அணியே விளையாடவுள்ளது.

 

கார்ட்ரைட் அணியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம், தனது முதலிரண்டு போட்டிகளிலும் ஓட்டங்களைப் பெறாத நிக் மடின்ஸனுக்கு மேலுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

மறுபக்கம், முதலாவது போட்டியின் இறுதியில் போராட்டத்தை வழங்கிய பாகிஸ்தான், இப்போட்டியில் சீரான திறமை வெளிப்பாட்டை அணி வீரர்களிடமிருந்து எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக, அண்மைய காலத்தில் ஓட்டங்களைப் பெறாத அசத் ஷபிக், யுனிஸ் கான் ஆகியோர் கடந்த போட்டியில் ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில், அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக்கிடமிருந்து பாகிஸ்தான் அணி ஓட்டங்களை எதிர்பார்த்துள்ளது.

 

முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி சார்பாக மூன்று இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இப்போட்டியில், முதல் போட்டியில் விளையாடிய ரஹாட் அலிக்குப் பதிலாக இம்ரான் கான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: சமி அஸ்லாம், அஸார் அலி, பாபர் அஸாம், யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் (அணித்தலைவர்), அசத் ஷபிக், சப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்), வஹாப் றியாஸ், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர், இம்ரான் கான்

 

அவுஸ்திரேலிய அணி: மற் றென்ஷோ, டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், நிக் மடின்ஸன், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட்

scroll to top