நாளை ஆரம்பிக்கிறது முதலாவது போட்டி

| 25 December 2016

 

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை நண்பகல் 1.30க்கு போர்ட் எலிஸபெத்தில் ஆரம்பிக்கிறது.

 

இத்தொடருக்கான இலங்கைக் குழாமில், உபாதைகள் காரணமாக சிம்பாப்வேக்கெதிரான குழாமில் இடம்பெறாத அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், உப அணித்தலைவர் தினேஷ் சந்திமால், வேகப்பந்து வீச்சாளர் டுஷ்மந்த சமீர ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளமை, சிம்பாப்வேயில் சிறப்பாகச் செயற்பட்ட இலங்கையின் இளம் அணிக்கு மேலதிக பலம் என்றபோதும், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை இலங்கை அணி எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே இந்தத் தொடர் அமையும்.

 

தென்னாபிரிக்காவில், இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளதுடன், எட்டுப் போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் இனிங்ஸ் தோல்வி என்பதோடு, ஒரு போட்டியில் 10 விக்கெட்டால் தோல்வியடைந்துள்ள நிலையில், இம்முறை தொடரை வெல்லவேண்டுமானால், இதுவரையில் இல்லாதளவுக்கு தென்னாபிரிக்காவில் திறமை வெளிப்பாட்டை மேற்கொண்டால் மாத்திரமே சாத்தியம்.

 

மறுபக்கம், அவுஸ்திரேலியாவில் வைத்து அவுஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் தென்னாபிரிக்க அணி களமிறங்குகிறது. தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் நிரந்தரத் தலைவராக பப் டு பிளெஸி நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவது தொடர் என்பதால், தனது சிறந்த தலைமைத்துவத்தை இத்தொடரில் வெளிப்படுத்தி முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்.

 

தென்னாபிரிக்க அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல் ஆகியோர் உபாதை காரணமாக இல்லாதபோதும், கஜிஸ்கோ றபடா, கைல் அபொட், வேர்ணன் பிளாந்தர் ஆகியோர் தென்னாபிரிக்க மண்ணில் அச்சுறுத்தலாகவே விளங்குவர். அவுஸ்திரேலியத் தொடரில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறிய சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லாவிடமிருந்து ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி எதிர்பார்த்துள்ளது.

 

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி: கௌஷால் சில்வா, டிமுத் கருணாரட்ன, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், அஞ்செலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), டினேஷ் சந்திமால் (விக்கெட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, ரங்கன ஹேரத், டுஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்

 

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: டீன் எல்கர், ஸ்டீபன் குக், ஹஷிம் அம்லா, ஜீன் போல் டுமினி, பப் டு பிளெஸி (அணித்தலைவர்), டெம்பா பவுமா, குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), வேர்ணன் பிளாந்தர், கைல் அபொட், கேஷவ் மஹராஜ், கஜிஸ்கோ றபடா

scroll to top