2ஆவது போட்டி நாளை ஆரம்பம்

| 01 January 2017

 

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கேப் டௌணில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி 1:30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

முதலாவது போட்டியில் முதல் இனிங்ஸில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட இலங்கை அணி, துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தது. மூன்றாவது இனிங்ஸில் இலங்கை அணி, போதியளவில் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை. 4ஆவது இனிங்ஸில், 4ஆவது நாளில் சிறப்பாகச் செயற்பட்ட அவ்வணி, 5ஆவது நாளில், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, படுதோல்வியடைந்திருந்தது.

 

இந்நிலையில், இத்தொடரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாயின், இன்று ஆரம்பிக்கும் போட்டியில் வெற்றி அல்லது வெற்றி - தோல்வியற்ற முடிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், இலங்கை அணி களமிறங்குகிறது.

 

இலங்கையின் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் யாரென்பதே பிரச்சினையாக உள்ளது. அதிரடி வீரர் குசல் பெரேரா, முதலாவது போட்டியில் களமிறங்கினாலும், மோசமான துடுப்பாட்டப் பிரயோகங்களை மேற்கொண்டு, ஆட்டமிழந்திருந்தார். எனவே, அவருக்குப் பதிலாக உபுல் தரங்க களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. மாறாக, குசல் பெரேரா விளையாடி, துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது.

 

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, அண்மையிலேயே காயத்திலிருந்து குணமாகிய நிலையில், முழுமையான போட்டி ஆயத்தங்களோடு காணப்பட்டிருக்கவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக லஹிரு குமார விளையாடவும் வாய்ப்புகளுண்டு.

 

தென்னாபிரிக்க அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

scroll to top