பி.சி.சி.ஐ தலைவர், செயலாளர் நீக்கம்

| 02 January 2017

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) தலைவர் அநுரக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷேர்க்கே ஆகியோர், அவர்களது பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். புதுடெல்லியில் இன்று காலை இடம்பெற்ற உச்சநீதிமன்ற அமர்விலேயே, உச்சநீதிமன்றத்தால் இவர்கள் நீக்கப்பட்டனர்.

 

"தற்போதிருந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், செயலாளர் ஆகியோர், சபையின் எந்தப் பணிகளிலும் ஈடுபடத் தடை விதிக்கப்படுவதற்கான உத்தரவை, உச்சநீதிமன்றம் விடுக்கிறது" என, தீர்ப்புத் தெரிவித்தது.

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக, அந்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா செயற்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதற்கு, கிரிக்கெட் சபை தயங்கி வந்தது. சில பரிந்துரைகளை ஏற்ற போதிலும், முக்கியமான சில பரிந்துரைகளையே, அச்சபை ஏற்க மறுத்தது.

 

குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்டோர், சபையிலோ அல்லது மாநில சபைகளிலோ பதவி வகிக்கக்கூடாது; இரண்டு தடவைகள் தொடர்ச்சியாகப் பதவி வகிக்கக்கூடாது; அரசியல் சார்புடையோர் பதவி வகிக்கக்கூடாது உள்ளிட்ட சில கோரிக்கைகள், அச்சபையினால் எதிர்க்கப்பட்டன.

 

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத குற்றச்சாட்டு, கிரிக்கெட் சபை மீது முன்வைக்கப்பட்டது. அதற்கான விசாரணைகள் இடம்பெறும் போது, மாநில சபைகளுக்கு நிதியளிப்புக்குத் தடை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், நாளாந்த நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை.

 

இந்நிலையில், இன்று இடம்பெற்ற அமர்வில், இது தொடர்பில் மீண்டும் ஆராயப்பட்டது. பிரதம நீதியரசர் டி.எஸ்.தாக்கூர், நீதியரசர்களான ஏ.எம்.கான்வில்கர், டி.வை.சந்திசூட் ஆகியோர் அடங்கிய அமர்வே, இந்த வழக்கை ஆராய்ந்தது.

 

இதன்போதே, லோதா செயற்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் "தடையாக"ச் செயற்பட்ட தலைவரும் செயலாளரும் பதவி நீக்கப்பட வேண்டுமென்ற லோதா செயற்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது.

 

குறித்த பரிந்துரைகள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவித்த பின்னர், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்குக் காணப்பட்டதோடு, அதை மீறும் வகையில், அச்சபை செயற்பட்டு வந்தது.

 

தலைவரும் செயலாளரும் பதவி விலக்கப்பட்ட பின்னர், லோதா செயற்குழுவால் வழங்கப்பட்டுள்ள தகுதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் சிரேஷ்ட உப தலைவர், புதிய இடைக்காலத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமென, நீதிமன்றம் அறிவித்துள்ளது. இணை செயலாளராக இருந்த அமிதாப் சௌதரி, இடைக்காலச் செயலாளராகப் பதவியேற்க வேண்டும்.

 

ஆனால், இவர்களிருவரும் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்க முன்னர், லோதா செயற்குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டுமென நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றவுள்ளதாக, அவர்கள் உறுதியளிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.

 

சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராகுல் ஜோரி, சபையின் நாளாந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படுவார். லோதா செயற்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், புதிய அதிகாரிகள் பதவியேற்பர். அவர்கள் பதவியேற்கும் வரை, பதவி வகிக்கவுள்ள நிர்வாகிகளைக் கண்காணிப்பதற்காக, குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் இந்த அதிரடித் தீர்ப்பு, நாளாந்த கிரிக்கெட் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கருதப்படுகிறது. இங்கிலாந்துக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடர், ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அதற்கான முழுமையான நிதி ஒதுக்கீடுகளும், நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்ளன.

 

இந்தத் தீர்ப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அநுரக் தாக்கூர், "இந்திய கிரிக்கெட்டுக்குச் சேவையாற்றும் கௌரவம், எனக்குக் காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, நிர்வாகம், விளையாட்டின் அபிவிருத்தி போன்வற்றைக் கருத்திற் கொள்ளும் போது, இந்திய கிரிக்கெட்டின் சிறப்பான காலங்களாக அமைந்தன. வரையறுக்கப்பட்டநடைமுறைகளைக் கொண்டு, நாட்டில் சிறப்பாக முகாமை செய்யப்படும் விளையாட்டு அமைப்பாக, இந்திய கிரிக்கெட் சபையே காணப்படுகிறது.

 

"என்னைப் பொறுத்தவரை. இது தனிப்பட்ட போராட்டமாக இருக்கவில்லை. விளையாட்டு அமைப்பொன்றின் சுயாதீனத்துக்கான போராட்டமே இல்லை. பிரஜை ஒருவர் செய்ய வேண்டியதைப் போன்று, உச்சநீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கீழ், இந்திய கிரிக்கெட் சபை சிறப்பாகச் செயற்படுமென, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் உணர்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

scroll to top