யுனிஸ் கான் சதம்: தடுமாறுகிறது பாகிஸ்தான்

| 05 January 2017

 

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கடந்த செவ்வாய்க்கிழமை (02), சிட்னியில் ஆரம்பமான மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாள் முடிவில், பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர் தனது 34ஆவது டெஸ்ட் சதத்தைப் பெற்றுள்ளபோதும், பாகிஸ்தான் அணி தடுமாறிவருகிறது.

 

மழை காரணமாக இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் மூன்று மணித்தியாலங்கள் வரை, தாமதமாகவே ஆரம்பித்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, தமது முதலாவது இனிங்ஸில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவின்போது எட்டு விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது.

 

தற்போது களத்தில், யுனிஸ் கான் 136 ஓட்டங்களுடனும் யாசீர் ஷா ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அஸார் அலி 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். யுனிஸ் கானும் அஸார் அலியும் உறுதியான இணைப்பாட்டமாக 146 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த நிலையில், அஸார் அலி “ரண் அவுட்” முறையில் ஆட்டமிழந்ததோடே பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரிந்திருந்தன. பந்துவீச்சில், நேதன் லையன் மூன்று விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேசில்வூட் இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஓ கெவி, மிற்சல் ஸ்‌டார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

பாகிஸ்தான் அணியின் இனிங்ஸில் சதம் பெற்றுக் கொண்டதன் மூலம், அவுஸ்திரேலியாவில் வைத்து தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் 11 நாடுகளில் வைத்து சதம் பெற்ற முதலாவது வீரர் என்ற அடைவை யுனிஸ் கான் அடைந்து கொண்டார். இது தவிர, ஐக்கிய அரபு அமீரகம் தவிர்ந்த, முழு அங்கத்துவம் பெற்றுள்ள 10 நாடுகளிலும் சதம்பெற்ற இரண்டாவது வீரராக யுனிஸ் கான் தன்னை இணைத்துக் கொண்டார். இவ்வரிசையில், முதலாமவராக ராகுல் ட்ராவிட் காணப்படுகின்றார்.

 

அவுஸ்திரேலிய அணி, தமது முதலாவது இனிங்ஸில் , எட்டு விக்கெட்டுகளை இழந்து 538 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், மற் றென்ஷோ 184, டேவிட் வோணர் 113, பீற்றர் ஹன்ட்ஸ்‌கொம்ப் 110 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வஹாப் றியாஸ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஷோர்ட் லெக் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தலைக்கவசத்தில் பந்து தாக்கியதால், தலையிடியை உணர்ந்த அவுஸ்திரேலிய அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மற் றென்ஷோ களத்திலிருந்து வெளியேறியிருந்தார். இப்போட்டியின் முதலாம் நாளில் துடுப்பெடுத்தாடும்போதும் றென்ஷோவின் தலைக்கவசத்தில் பந்து தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, உடல்நிலை சரியில்லாமை காரணமாக, இரண்டு ஓவர்கள் மட்டும் விக்கெட் காப்பில் ஈடுபட்ட மத்தியூ வேட் மைதானத்திலிருந்து வெளியேறியிருந்த நிலையில், விக்கெட் காப்பாளராக பீற்றர் ஹன்ட்ஸ்‌கொம்ப் செயற்பட்டிருந்தார்.

scroll to top