அடிபணிந்தது இலங்கை

| 05 January 2017

 

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், இலங்கை அணி மிக மோசமான பெறுபேறை வெளிப்படுத்தி, படுதோல்வியைச் சந்தித்தது.

 

நியூலன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் 4ஆவது நாளான இன்று, 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களுடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணிக்கு வழங்கப்பட்ட 507 என்ற இலக்கு, பெறப்படக் கடினமானது என்ற போதிலும், ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.

 

அணியின் சிரேஷ்ட வீரர்களான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், உப தலைவர் டினேஷ் சந்திமால் ஆகியோர் களமிறங்கினர். இந்தப் போட்டியில் இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இவர்களின் பங்களிப்பு அவசியமாக இருந்தது. ஆனால், போட்டி ஆரம்பித்த 6ஆவது ஓவரிலேயே சந்திமால் ஆட்டமிழந்தார். 2 ஓவர்களின் பின்னர், உபுல் தரங்க ஆட்டமிழந்தார்.

 

பின்னர், அஞ்சலோ மத்தியூஸும் பந்துவீச்சாளர்களுமே எஞ்சியிருந்த நிலையில், தரங்க ஆட்டமிழந்த ஓவரிலேயே மத்தியூஸும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களுடன் காணப்பட்ட இலங்கை அணி, 200 ஓட்டங்களைக்கூடப் பெறுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், இலங்கை அணி 200 ஓட்டங்களைக் கடப்பதை உறுதிப்படுத்தினார். ஹேரத் பெற்ற 35 ஓட்டங்களின் உதவியுடன், இலங்கை அணி 224 ஓட்டங்களைப் பெற்றது.

 

பந்துவீச்சாளர்களில், 21 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான கஜிஸ்கோ றபடா, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கௌஷால் சில்வா, தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர், றபடாவின் விக்கெட்டுகளில் உள்ளடங்கியிருந்தனர். தவிர, வேர்ணன் பிலாந்தர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியில் இலங்கை அணி, 282 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்த நிலையில், இனிங்ஸ் தோல்வியடையாத போட்டிகளில், இலங்கை அணி பெற்றுக் கொண்ட 2ஆவது மோசமான தோல்வியாக இது அமைந்தது.

 

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: இலங்கை

தென்னாபிரிக்கா: 392/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 129, குயின்டன் டீ கொக் 101, ஃபப் டு பிளெஸி 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 6/122, ரங்கன ஹேரத் 2/57, சுரங்க லக்மால் 2/93)

இலங்கை: 110/10 (துடுப்பாட்டம்: உபுல் தரங்க ஆ.இ 26, திமுத் கருணாரத்ன 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: வேர்ணன் பிலாந்தர் 4/27, கஜிஸ்கோ றபடா 4/37, கேஷவ் மஹராஜ் 2/32)

தென்னாபிரிக்கா: 224/7 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 55, ஃபப் டு பிளெஸி 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: சுரங்க லக்மால் 4/69)

இலங்கை: 192/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 49, ரங்கன ஹேரத் ஆ.இ 35, டினேஷ் சந்திமால் 30, ஓட்டங்கள். பந்துவீச்சு: கஜிஸ்கோ றபடா 6/55, வேர்ணன் பிலாந்தர் 3/48)

போட்டியின் நாயகன்: கஜிஸ்கோ றபடா

scroll to top