அபொட், றொஷோ திடீர் ஓய்வு

| 05 January 2017

 

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபொட், இளம் துடுப்பாட்ட வீரர் றீலி றொஷோ இருவரும், சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வுபெற்றுள்ளனர். இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் விளையாடுவதற்கே அவர்கள் ஓய்வுபெற்றுள்ளனர்.

 

இங்கிலாந்து பிராந்திய அணிகளில், கொல்பாக் முறையில் வீரர்களைச் சேர்க்கும் முறையில் விளையாடுவதற்கே, அபொட்டும் றொஷோவும் முடிவெடுத்துள்ளனர். கொல்பாக் முறை என்பது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சங்க ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்குக் காணப்படும் பணியாற்றுவதற்கும் நடமாடுவதற்குமான சுதந்திரத்தைக் கொண்டுள்ளனர் என்பதாகும். அவ்வாறான ஒப்பந்தத்தைக் கொண்ட நாடுகளில் தென்னாபிரிக்காவும் ஒன்றாகும்.
இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்ற பின்னர், இது தொடர்பான அறிவிப்புகள் விடுக்கப்பட்டன.

 

முதலில், கைல் அபொட் செல்வதை உறுதிப்படுத்திய அணித்தலைவர் ஃபப் டு பிளெஸி, "ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை கைல் அபொட் பெறாமை குறித்து வருத்தமடைகிறேன். அவரது இறுதிப் போட்டியில் அவர் அவ்வாறு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்" என்றார்.

 

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தென்னாபிரிக்காவை விட்டு அபொட் செல்லவுள்ளார் என்ற தகவல் வெளியானதுடன், அவருடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அவை வெற்றியளிக்காமை காரணமாக, தற்போது அந்த முடிவு குறித்து அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்தத் தொடரின் 3ஆவது போட்டியில் கைல் அபொட் விளையாடத் தயாராக இருந்த போதிலும், எதிர்காலத்தில் தென்னாபிரிக்காவுக்காக விளையாடப் போவதில்லை என்பதால், விடைபெறும் போட்டியொன்றை வழங்க, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, தயாராக இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போன்று கருத்துத் தெரிவித்த டு பிளெஸி, “அவர் (அபொட்), தென்னாபிரிக்காவுக்காக விளையாட வேண்டுமென நான் நினைக்கிறேன். ஆனால், எங்களது அணியின் ஓர் அங்கமாக அவர் இருக்க மாட்டாரெனில், அவரிலிருந்து தாண்டிப் போகவேண்டிய தேவையுள்ளது. அவரது முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அம்முடிவோடு நான் ஒத்துப் போகவில்லை” என்று தெரிவித்தார்.

 

தனது முடிவு தொடர்பாக விளக்கமளித்த அபொட், இந்த ஒப்பந்தத்தில், கடந்தாண்டு கைச்சாத்திட்டதாகத் தெரிவித்தார். இன்னும் 12 மாதங்களின் பின்னர், அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் உடற்றகுதியுடன் இருக்கும் போது, தான் விளையாடாமல் இருக்கும் போது, ஹம்ப்ஷையர் அணிக்காக விளையாடாமல் போனமை குறித்து வருந்திக் கொண்டிருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தத் தொடரின் முடிவிலேயே, தனது அறிவிப்பை விடுக்க இருந்ததாகவும், எனினும் துரதிர்ஷ்டவசமாக, அதை இப்போதே அறிவிக்க வேண்டியேற்பட்டதாகத் தெரிவித்தார்.

 

தனது முடிவு குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட றொஸோ, தென்னாபிரிக்காவை விட்டுச் செல்வதற்காக தான் எடுத்த முடிவு, இலகுவானதாக அமைந்திருக்கவில்லை என்று தெரிவித்தார்.

 

தற்போதுள்ள அறிவிப்புகளின்படி, ஹம்ப்ஷையர் அணிக்காக 4 ஆண்டுகளுக்காக அபொட்டும், 3 ஆண்டுகளுக்காக றொஸோவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

scroll to top