நாளை முதல் கோலியின் கைகளில் இந்தியா

| 05 January 2017

 

இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளுக்கான தலைவராக இருந்த மகேந்திரசிங் டோணி, தனது பதவியிலிருந்து, நேற்றிரவு, திடீரென விலகியதைத் தொடர்ந்து, தேர்வாளர்கள் நாளைய தினம் கூடவுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியக் குழாமைத் தெரிவுசெய்வதற்காகவே அவர்கள் நாளை கூடுகின்றனர்.

 

2007ஆம் ஆண்டு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தலைவராக முதலில் நியமிக்கப்பட்ட டோணி, உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2008ஆம் ஆண்டில், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவரானார்.

 

எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பதில் பெயர்போனவரான டோணி, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த டெஸ்ட் தொடருக்கு நடுவில், டெஸ்ட் தலைமையிலிருந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியிருந்தார். அதேபோன்றே, யாரும் எதிர்பாராத வண்ணமாகவே, அவரது இந்த அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

 

ஆனால், டெஸ்ட் தலைவராகப் பதவியேற்ற பின்னர், இளம் வீரரான விராத் கோலியின் கீழ், டெஸ்ட் அணியில் பாரிய மாற்றங்களும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது. ஆகவே, அனைத்து வகையான போட்டிகளினதும் தலைவராக கோலி வருவாரா என்ற கேள்வியை விட, எப்போது வருவார் என்ற கேள்வியே நிலவியது.

 

அந்தக் கேள்விக்கான விடையாக, டோணியின் பதவி விலகல், "வெள்ளிக்கிழமை (நாளை) முதல்" என்ற பதிலைத் தந்துவிட்டிருக்கிறது. இரவிச்சந்திரன் அஷ்வின், றோகித் ஷர்மா, அஜின்கியா ரஹானே உள்ளிட்ட சிலர், குறைந்தளவு வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும், விராத் கோலியைத் தாண்டி, வேறு எவரையும் நியமிப்பதற்கு, தேர்வாளர்கள் முயல்வார்கள் என்று கருதப்படவில்லை.

 

இந்திய அணியின் தலைமைப் பதவியென்பது, இலகுவான ஒன்று கிடையாது. சச்சின் டென்டுல்கர் போன்ற ஜாம்பவானே, அணித்தலைமையைச் சிறப்பாகக் கொண்டு நடத்துவதற்குச் சிரமப்பட்டிருந்தார். ஆகவே, டெஸ்ட் தலைவராக கோலி நியமிக்கப்படும் போது, அவரது துடுப்பாட்டப் பெறுபேறுகள் பாதிக்கப்படுமென்ற அச்சம் நிலவியது. ஆனால், அவரது துடுப்பாட்டத்தில் அவர் வெளிப்படுத்திய அதிசிறப்பான துடுப்பாட்டப் பெறுபேறுகள், அணித்தலைமை என்ற சவாலை, அவர் சிறப்பாக எதிர்கொள்கின்றார் என்பதைக் காட்டுகிறது.

 

எனவே, தற்போதுள்ள சவாலாக, 3 வகையான போட்டிகளிலும் விளையாடி, அவற்றில் தலைமை தாங்கும் சவால், கோலிக்குக் காத்திருக்கிறது. தவிர, இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளிலும் அவருக்கான தலைமைப் பதவி இருக்கிறது. இவ்வளவற்றையும் சமாளித்துக் கொண்டு, தனது துடுப்பாட்டப் பெறுபேறுகள் பாதிக்காமல் செயற்படுவார் கோலி என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

 

இதற்கு மேலதிகமாக, டோணி போன்ற மாபெரும் ஆளுமையை, அணிக்குள் சாதாரண வீரராக வைத்துக் கொண்டு, அணியை எவ்வாறு கோலி கையாள்வார் என்ற சவாலும் இருக்கிறது. ஆனால், பெரிதாகப் பகட்டுத்தனம் இல்லாத டோணி, அணிக்குள் கோலிக்கான பெரியளவான சவாலாக இருக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது.

 

இந்தியாவின் மிகப்பெரிய மதம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில், 3 வகையான போட்டிகளின் தலைவராகவும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரராகவும் உள்ள கோலி, நாளை மேற்கொள்ளப்படவுள்ள தேர்வைத் தொடர்ந்து, நாட்டின் முக்கியமான ஒருவராக மாறவுள்ளார் என்பதே உண்மையாகும்.

scroll to top