'டோணி தான் எப்போதும் தலைவர்'

| 08 January 2017

 

இந்திய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விராத் கோலி, தனது தலைவராக, எப்போதும் மகேந்திரசிங் டோணியே இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளின் தலைவராக இருந்த டோணி, கடந்த வாரம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைவராக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, கோலி உறுதிப்படுத்தப்பட்டார். ஏற்கெனவே டெஸ்ட் தலைமைத்துவத்தை வகிக்கும் கோலி, தற்போது ஒட்டுமொத்த அணியின் தலைமைத்துவத்தையும் ஏற்பது தொடர்பாகவும் டோணி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

 

"தலைமைத்துவம், என்னைச் சரியான விதத்தில் நடத்திக் கொள்ளுதல் ஆகிய விடயங்களில், அவரிடமிருந்து (டோணி), நான் ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டேன். 'டோணி' என்று நீங்கள் நினைக்கும் போது, மனதில் முதலாவதாக வருவது 'அணித்தலைவர்' என்பது தான்.

 

"என்னைப் பொறுத்தவரை, எனது அணித்தலைவராக அவரே எப்போதும் இருப்பார். ஏனென்றால், எனது கிரிக்கெட் வாழ்வு, அவரது தலைமைத்துவத்தின் கீழேயே ஆரம்பித்தது. என்னை வழிநடத்திய, எனக்கு வாய்ப்புகளை வழங்கிய, கிரிக்கெட் வீரராக நான் வளர்வதற்கு எனக்கு வாய்ப்புகளையும் நேரங்களையும் வழங்கியவராக, அணியிலிருந்து நான் நீக்கப்படுவதைத் தடுத்த ஒருவராக, டோணியே இருப்பார்" என்று கோலி குறிப்பிட்டார்.

 

இருவருக்குமிடையில் இருதரப்பு மரியாதை காணப்படுவதாகக் குறிப்பிட்ட கோலி, "நாம் இருவரும் அற்புதமான நட்பைக் கொண்டுள்ளோம். அவரது கருத்துகளை எனதருகே கொண்டிருப்பதற்கு, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்றும் குறிப்பிட்டார்.

 

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோணி திடீரென ஓய்வுபெற்றபோது, 2015ஆம் ஆண்டு ஜனவரியில், அதற்கான தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்ற கோலி, அப்போது இருந்ததை விட, இப்போது அதிகம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். டெஸ்ட் போட்டிகளில் டோணி விளையாட மாட்டாரென, போட்டிக்கு முதல்நாளே தனக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும், திடீரென அணித்தலைவராக விளையாட வேண்டியேற்பட்டதாகவும், கோலி குறிப்பிட்டார்.

 

கோலியின் கீழ், 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களில் இந்திய அணி ஈடுபடவுள்ள நிலையில், அந்தத் தொடருக்காக அணியை வழிநடத்துதல், தனது வாழ்வின் மிகப்பெரிய அடைவாக அமையுமென, கோலி மேலும் குறிப்பிட்டார்.

scroll to top