‘இளைய அணி போல் விளையாடினோம்’

| 03 May 2017

சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில், இளைய அணியான தாங்கள், இளைய அணி போல் திறமையை வெளிப்படுத்தியதாக, டெல்லி டெயாடெவில்ஸ் அணியின் பதில் அணித் தலைவர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

 


வழக்கமான அணித் தலைவர் சகீர் கானுக்கு ஏற்பட்ட உபாதையைத் தொடர்ந்து, அணியின் பதில் தலைவராகப் பணியாற்றும் கருண் நாயர், முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுகளால் தோல்வியைச் சந்தித்தார்.

 


இந்நிலையில், ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டி, முக்கியமானதாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதரபாத் அணி, யுவ்ராஜ் சிங்கின் ஆட்டமிழக்காத 70 (41) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

 

பதிலளித்தாடிய டெல்லி அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.  இந்நிலையில் கருத்துத் தெரிவித்த கருண் நாயர், “அது, மிகச்சிறப்பான வெற்றி என நான் நினைக்கிறேன். இளைய அணியான நாங்கள், இளைய அணி போன்று விளையாட வேண்டும் என்பது குறித்தே கலந்துரையாடினோம். ஆகவே நாங்கள், அங்கு சென்று, அச்சமின்றி விளையாடினோம்” என்றார்.

 


பந்துவீச்சை அடித்து விளையாட முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், அணியின் முதல் 4 துடுப்பாட்ட வீரர்களுமே இளைய வீரர்களாக இருப்பதால், அடித்தாட முடிவு செய்ததாகக் கூறினார்.  தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவித்த யுவ்ராஜ் சிங், எதிரணியின் தலைவர் கருண் நாயர் வழங்கிய பிடி, புவனேஷ்வர் குமாரால் தவற விடப்பட்டமையை, முக்கியமான தருணமாகக் குறிப்பிட்டார்.

scroll to top