‘சடுதியான நடவடிக்கைகள் வேண்டாம்’

| 03 May 2017

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) விசேட பொதுக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட்டின் நலன்கள் பாதிக்கப்படக்கூடிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அதில் தலையிடவுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள, நிர்வாகிகள் செயற்குழு தெரிவித்துள்ளது.

செயற்குழுவின் தலைவர் வினோத் ராய்

சர்வதேச கிரிக்கெட் சபையிடமிருந்து, பி.சி.சி.ஐ-க்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறித்து, இரு சபைகளுக்குமிடையில் முரண்பாடு நிலவுகிறது.

 


சர்வதேச கிரிக்கெட் சபையால் நிறைவேற்றப்பட்ட வருமானத் திட்டத்தின் மூலம், தமக்குக் கிடைக்கும் வருமானம் போதாது எனக் கருதும் பி.சி.சி.ஐ, சடுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றது.

 


குறிப்பாக, உறுப்பினர் பங்குபற்றுமை ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு, பி.சி.சி.ஐ-இன் சில உறுப்பினர்கள் முயன்றுள்ளனர். அந்த ஒப்பந்தமே, சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களில், அணிகள் பங்குபற்றுகின்றமைக்கான ஒப்பந்தமாகும்.
இந்நிலையிலேயே, பி.சி.சி.ஐ நிர்வாகிகள் சிலரின் இந்த முயற்சியை, நிர்வாகிகள் குழு, தடுத்து நிறுத்தியுள்ளது.

 


அத்தோடு, இந்திய கிரிக்கெட்டின் நலன்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

scroll to top