இந்தியாவின் சம்பியன்ஸ் கிண்ண குழாம்

| 08 May 2017

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நடப்புச் சம்பியன்களான இந்திய அணியின், சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, பெருமளவு ஆச்சரியங்களின்றியே அமைந்தது.

 

இந்தத் தொடரில், இந்தியா பங்குபற்றுமா என்ற கேள்வி காணப்பட்ட நிலையில், பங்குபற்றுமென, நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள், டெல்லியில் நேற்றுக் கூடி ஆராய்ந்தனர்.

 

இதைத் தொடர்ந்து, இத்தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவர் விராத் கோலியின் தலைமையின் கீழ், 15 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குழாமில், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி, மீள அழைக்கப்பட்டுள்ளார். அவர் இறுதியாக, 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போதே, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

 

தவிர, அண்மைக்காலத்தில் காயங்களால் அவதிப்பட்ட றோகித் ஷர்மா, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷர்மா, ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபற்றிவருகின்ற போதிலும், ஒருவகைக் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட அஷ்வின், இன்னமும் குணமடைந்து வருகிறார்.

 

இன்னொரு சுழற்பந்து வீச்சாளராக, இரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.ஐ.பி.எல் போட்டிகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் யஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் போன்ற புறச்சுழல் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கவில்லை. சிரேஷ்ட புறச்சுழல் பந்துவீச்சாளரான அமித் மிஷ்ராவுக்கும் இடம் கிடைக்கவில்லை.

 

ஐ.பி.எல் போட்டிகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் றிஷாப் பான்ட், டினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா ஆகியோரோடு, குல்தீப் யாதவ், ஷார்டுல் தாக்கூர் ஆகியோர், தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர்.

 

குழாம்: விராத் கோலி, றோகித் ஷர்மா, ஷீகர் தவான், அஜின்கியா ரஹானே, மனிஷ் பாண்டே, யுவ்ராஜ் சிங், கேதார் யாதவ், மகேந்திரசிங் டோணி, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஹார்டிக் பாண்டியா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி.

scroll to top