வெற்றியுடன் விலகினர் மிஸ்பா, யுனிஸ்

| 15 May 2017

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியை, இறுதி நேரத்தில் வெற்றிகொண்ட பாகிஸ்தான் அணி, தொடரையும் கைப்பற்றியது. இதன்மூலம், இந்தப் போட்டியுடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், சிரேஷ்ட வீரர் யுனிஸ் கான் ஆகியோர், வெற்றியுடன் விடைபகர்ந்தனர்.

 

304 ஓட்டங்கள் என்ற இலக்கு வழங்கப்பட்ட மே.தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 7 ஓட்டங்களுடன், 5ஆவது நாளை ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 6 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களுடன் தடுமாறியது.

 

எனினும், றொஸ்டன் சேஸும் அணித் தலைவர் ஜேஸன் ஹோல்டரும், 7ஆவது விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, மெதுவாகவும் துடுப்பெடுத்தாடினர். அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட, இறுதி விக்கெட்டுடன், 9.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலைமை வந்தது.

 

சேஸும் ஷனொன் கப்ரியலும், இறுதிவரை போராடிய போதிலும், இறுதிக்கு முன்னைய ஓவரின் இறுதிப் பந்தில், யாசீர் ஷா வீசிய பந்தை அடித்தாட முயன்ற கப்ரியல், ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், இறுதிவரை போராடிய சேஸ், ஆட்டமிழக்காது களத்தில் காணப்பட்டார்.

 

துடுப்பாட்டத்தில் றொஸ்டன் சேஸ், தனது 3ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ததோடு, ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைப் பெற்றார். ஷிம்ரன் ஹேட்மையர் 25, ஹோல்டர் 22 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் யாசீர் ஷா 5, ஹஸன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக, றொஸ்டர் சேஸ் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, யாசீர் ஷா தெரிவானார்.

 

scroll to top