மும்பை - பூனே அணிகள் இன்று மோதல்

| 15 May 2017

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகள், இன்று ஆரம்பிக்கின்றன. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட் அணியும் மோதவுள்ளன.

 

மும்பை வன்கெடே மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. 

 

புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ், றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட், சண்றைசர்ஸ் ஹைதரபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள், இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

 

ஐ.பி.எல் விதிகளின்படி, முதலிரு இடங்களையும் பெற்ற அணிகள், “தகுதிப் போட்டி” என்ற பெயரில் மோதும். இதில் மோதும் அணிகளில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

 

3ஆவது, 4ஆவது இடங்களைப் பெற்ற அணிகள், “வெளியேற்றப் போட்டி” என்ற பெயரில், ஒரு போட்டியில் மோதும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, “தகுதிப் போட்டி”யில் தோல்வியடைந்த அணியுடன் மோதும். இதில் வெற்றிபெறும் அணியே, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

 

இதன்படி, தொடரில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட மும்பை அணி, அதிக வாய்ப்புகளுடன், இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. மறுபக்கமாக, ஆரம்பத்தில் தடுமாறி, புள்ளிகளின் பட்டியலில் இறுதி இடத்தில் காணப்பட்டு, பின்னர் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, 2ஆவது இடத்தைப் பிடித்துள்ள பூனே அணி, வெற்றி மகிழ்ச்சியுடன் களமிறங்குகிறது.

 

எனினும், பூனே அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ், இஙகிலாந்துக்குத் திரும்பிச் செல்லும் நிலையில், அவரின் இழப்பை, அவ்வணி எவ்வாறு ஈடு செய்யுமென்பதே, தற்போதுள்ள கேள்வியாக உள்ளது. ஆனால், பூனே அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக, இவ்வாண்டுத் தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டிகளிலும், பூனே அணியே வெற்றிபெற்றுள்ளது.   

scroll to top