சாதனை படைத்தனர் இந்தியப் பெண்கள்

| 16 May 2017

இந்தியா, சிம்பாப்வே, தென்னாபிரிக்கா, அயர்லாந்து பெண்கள் அணிகள் என நான்கு அணிகள் பங்குபற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற போட்டியில், இந்தியப் பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

 

தென்னாபிரிக்காவின் பொச்செஸ்ர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவி மிதாலி ராஜ், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான, டீப்தி ஷர்மா 188 (160), பூனம் றாவுட் 109 (116) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

டீப்தியும் றாவுட்டும் சேர்ந்து, முதலாவது விக்கெட்டுக்காக 320 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், முதலாவது விக்கெட்டுக்காகப் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுவேயாகும் என்பதோடு, பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும்.

 

இதற்கு முன்னர், இலங்கையின் சனத் ஜெயசூரியாவும் உபுல் தரங்கவும் இணைந்து, இங்கிலாந்துக்கெதிராக 2006ஆம் ஆண்டு, 286 ஓட்டங்களைப் பெற்றதே, முதலாவது விக்கெட்டுக்காக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இருந்தன. பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இங்கிலாந்தின் கரோலின் அட்கின்ஸும் சாரா டெய்லரும் தென்னாபிரிக்காவுக்கெதிராக 2008ஆம் ஆண்டில், முதலாவது விக்கெட்டுக்காகப் பெற்ற 268 ஓட்டங்களே, இதுவரையில் அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்திருந்தன.

 

இதேவேளை, டீப்தி பெற்ற 188 ஓட்டங்கள், பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாகும். அவுஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க், டென்மார்க்குக்கெதிராக, 1997ஆம் ஆண்டில் பெற்ற ஆட்டமிழக்காத 229 ஓட்டங்களே, அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாகக் காணப்படுகின்றன.

 

இந்நிலையில், 359 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 40 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 249 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், இராஜேஸ்வரி கயகவாட் 4, ஷிக்கா பாண்டே 3 விக்கெட்டிகளைக் கைப்பற்றினர்.

 

அயர்லாந்துக்காக வழமையாக விளையாடும் சில வீராங்கனைகள் இல்லாத பட்சத்தில், 15 பேர் கொண்ட அயர்லாந்துக் குழாமில், 7 புதுமுக வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

scroll to top