கொல்கத்தாவா, ஹைதரபாத்தா?

| 16 May 2017

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகளில், இன்று இடம்பெறும் வெளியேற்றப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன.

 

பெங்களூருவில் இடம்பெறும் இப்போட்டி, இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிப் போட்டியில் தோல்வியற்ற அணியோடு மோதி, அதில் வெற்றிபெறும் அணியே, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

 

குழுநிலையில், 14 போட்டிகளில் இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் வெற்றிபெற்ற போதிலும், ஹைதரபாத் அணியின் ஒரு போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டதால், அவ்வணிக்கு மேலதிகமாக ஒரு புள்ளி கிடைத்தது. இதனால், ஹைதரபாத் அணி 3ஆவது இடத்திலும் கொல்கத்தா அணி 4ஆவது இடத்திலும் காணப்பட்டன.

 

குழுநிலைப் போட்டிகளில், கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதரபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதரபாத் அணியும் வெற்றிபெற்றிருந்தன. எனவே, பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் எவ்வணி வெற்றிபெறும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

 

நடப்புச் சம்பியன்களான ஹைதரபாத் அணி, குழு நிலையில் தான் பங்குபற்றிய இறுதி 2 போட்டிகளையும் வெற்றிபெற்ற நிலையில், இப்போட்டியில் பங்குபற்றுகிறது. மறுபக்கமாக கொல்கத்தா அணி, குழு நிலையில் தான் பங்குபற்றிய இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

scroll to top