முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

| 13 June 2017

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி, கார்டிப்பில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

குறித்த முதலாவது அரையிறுதிப் போட்டியில், காலிறுதிப் போட்டி போன்று அமைந்த குழு பி-இன் இறுதிக் குழுநிலைப் போட்டியில், இலங்கையை வென்று அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான், இங்கிலாந்தைச் சந்திக்கிறது.

 

குறித்த இறுதிக் குழுநிலைப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல 73 (86), அஞ்சலோ மத்தியூஸ் 39 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான், ஹஸன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர், ஃபாஹிம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 237 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், பிடியெடுப்புகள் தவறவிடப்பட, சஃப்ராஸ் அஹமட்டின் வழிகாட்டலில், 44.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

 

துடுப்பாட்டத்தில், சஃப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 61 (79), ஃபக்கார் ஸமன் 50 (36), அஸார் அலி 34 (50), மொஹமட் ஆமிர் ஆட்டமிழக்காமல் 28 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், லசித் மலிங்க, திஸர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

இந்நிலையிலேயே, எதிர்வுகூற முடியாத அணி எனப்படும் பாகிஸ்தான், அதிரடியான நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில், அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்கின்றது. ஆக, இந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள்,  இங்கிலாந்தின் பக்கமே அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும், மொஹமட் ஆமிர், ஜுனைட் கான், ஹஸன் அலி என அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு வரிசையைக் கொண்டுள்ள பாகிஸ்தான், இங்கிலாந்தின் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினால், வெல்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

 

இங்கிலாந்து அணியின் தூணாக, சகலதுறைகளிலும் கலக்கும் பென் ஸ்டோக்ஸ் காணப்படுகையில், அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், அண்மைய போட்டிகளில் பெற்ற ஓட்டங்களும் அவ்வணிக்கு பலம் சேர்க்கின்றன.

 

அணியின் ஒரேயொரு பலவீனமாக, தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெறத் தடுமாறிவரும் ஜேஸன் றோய் காணப்படுகின்றார். றோயை, தான் விளையாடிய அண்மைய போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்துவரும் ஜொனி பெயர்ஸ்டோ மூலம் இங்கிலாந்து பிரதியீடு செய்யுமா என்பது சந்தேகத்துக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது. ஏனெனில், இங்கிலாந்து அணி தொடர்ச்சியை விரும்புகிறது. பந்துவீச்சுப் பக்கம், காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள மார்க் வூட்டுடன், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான லியம் பிளங்கெட்டும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜேக் போலும் அசத்தக் காத்திருக்கின்றனர்.

 

மறுபக்கம், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சே, எப்போதும் போன்றே, இப்போதும் பலத்தை வழங்குவதுடன், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அறிமுகத்தை மேற்கொண்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபக்கார் ஸமன், அதிரடியாக ஓட்டங்களை குவிக்கின்றமை அனுகூலத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும், பாகிஸ்தானின் மத்தியவரிசை தொடர்ந்து சொதப்பி வருகின்ற நிலையில், அனுபவ வீரர்கள் மொஹமட் ஹபீஸ், ஷொய்ப் மலிக் ஆகியோரிடமிருந்து ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

குறித்த முதலாவது அரையிறுதிப் போட்டிக்கு, மராயஸ் எரஸ்மஸ், றொட் டக்கர் ஆகியோர் கள நடுவர்களாக கடமையாற்றவுள்ள நிலையில், மூன்றாவது நடுவராக கிறிஸ் கபனி கடமையாற்றவுள்ளார். நான்காவது நடுவராக,  ப்ரூஸ் ஒக்ஸென்போர்ட் கடமையாற்றவுள்ள நிலையில், போட்டி மத்தியஸ்தராக, அன்டி பைகுரோப்ட் கடமையாற்றவுள்ளார்.     

scroll to top