இங்கிலாந்தை வென்று இறுதியில் பாகிஸ்தான்

| 14 June 2017

 

இங்கிலாந்தில் இடம்பெற்றுவருகின்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

 

கார்டிப்பில், இன்று (14) இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தைத் தோற்கடித்தே, இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

 

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சஃப்ராஸ் அஹமட், இங்கிலாந்து அணியை, முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். உபாதை காரணமாக, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் பங்கேற்காத நிலையில், அவருக்குப் பதிலாக, ருமான் றயீஸ் அணியில் இடம்பெற்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். சகலதுறை வீரர் ஃபாஹிம் அஷ்ரப்புக்குப் பதிலாக, ஷடாப் கான் அணியில் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில், ஜேஸன் றோய்க்குப் பதிலாக, ஜொனி பெயர்ஸ்டோ அணியில் இடம்பெற்றார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, மெதுவான ஆடுகளத்தில், பாகிஸ்தானின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து அணி சார்பாக, ஜோ றூட் 46 (56), ஜொனி பெயார்ஸ்டோ 43 (57), பென் ஸ்டோக்ஸ் 34 (64), அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் 34 (53) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹஸன் அலி 3, ஜுனைட் கான், ருமான் றயீஸ் ஆகியோர் தலா 2, ஷடாப் கான் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 212 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 37.1 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில், வெற்றியிலக்கை அடைந்து, எட்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

துடுப்பாட்டத்தில், பாகிஸ்தான் அணி சார்பாக, அஸார் அலி 76 (100), ஃபக்கார் ஸமன் 57 (58), பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 38 (45), மொஹமட் ஹபீஸ் 31 (21) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேக் போல், அடில் ரஷீட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக, ஹஸன் அலி தெரிவானார்.

scroll to top