ஆடுகளத்தைக் குறைகூறுகிறார் மோர்கன்

| 15 June 2017

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கெதிராக நேற்று முன்தினம் பெற்றுக் கொண்ட அதிர்ச்சித் தோல்விக்கு, ஆடுகளத்தின் மீது, இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன், குறைகூறியுள்ளார்.

 

இந்தத் தொடரைக் கைப்பற்றக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் கருதப்பட்ட இங்கிலாந்து அணி, தனது சொந்த நாட்டிலேயே இந்தத் தொடர் இடம்பெற்ற நிலையில், தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது.

 

ஆனால், பாகிஸ்தான் அணியால் இலகுவாக வீழ்த்தப்பட்ட இங்கிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காக சர்வதேச கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் தொடர்களில், இதுவரையிலும் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றாத அணி என்ற தனது பெயரை, தொடர்ந்தும் நீடித்துக் கொண்டது.

 

கார்டிப்பில் நடந்த இப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், ஜூலை 12ஆம் திகதி, இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளமாக அமைந்தது. இதுவே, ஒய்ன் மோர்கனின் கருத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

 

“சொந்த நாட்டில் விளையாடுவதன் அனுகூலமேதும் காணப்பட்டிருக்கவில்லை. இந்தத் தொடரில் ஏற்கெனவே பயன்படுத்த ஆடுகளமொன்றிலேயே நாங்கள் விளையாட வேண்டியிருக்கும் என அறிந்திருந்தோம். இலங்கைக்கெதிரான போட்டியைப் பார்த்த நாங்கள், அந்த ஆடுகளம், மிகவும் மோசமானது அல்ல என்பதை அறிந்திருந்தோம்.

 

“ஆனால், எட்ஜ்பஸ்டனிலிருந்து வந்து இங்கு போட்டிகளில் பங்குபற்றிய போது, வேகத்திலும் பவுண்ஸிலும், அது மிகப்பெரிய மாற்றமாக இருந்தது. பழக்கப்படுத்துவதற்கு முடியாத மாற்றமாக அது அமைந்து கொண்டது” என்று தெரிவித்தார்.

 

“ஆடுகள நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் நாங்கள் தவறிவிட்டோம். இந்தத் தொடரில், நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன், எனவே, ஏமாற்றமாக இது அமைந்தது. பாகிஸ்தானுக்குப் பாராட்டுகள், அவர்கள் சிறப்பாக விளையாடினார்” என்று தெரிவித்தார்.

 

ஆனால், பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது, ஓவருக்கு 6 ஓட்டங்கள் என்ற அடிப்படையில், இலகுவாகத் துடுப்பெடுத்தாடியதே என்று கேட்கப்பட்ட போது, “இரண்டு நாட்களுக்கு முன்னர், அந்த ஆடுகளத்தில் அவர்கள் விளையாடினர் என்பதே அதற்கான விளக்கம்” என்று அவர் பதிலளித்தார்.  
மோர்கனின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிப்பது போன்ற, எதிர்மறையான கருத்தை, பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் வெளியிட்டார்.

 

“இந்த ஆடுகளம், மிகச் சிறந்தது என நினைக்கிறேன். இரு அணிகளுக்கும் இது சிறந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் சிறப்பாக விளையாடினோம் என நான் நினைக்கிறேன், அதனால் தான் நாங்கள் வென்றோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

 

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது சொந்த நாட்டில் விளையாட முடியாத நிலையில், வேறு நாடுகளில் தங்களது சொந்த நாட்டுப் போட்டிகளையும் விளையாடிவரும் பாகிஸ்தான் அணிக்கெதிராக, தனது சொந்த நாட்டில் இந்தத் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததோடு மாத்திரமல்லாது, ஆடுகளத்தையும் தற்போது குறை கூறுவதென்பது, தோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாத மனத்தையே காட்டுகிறது என, விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

scroll to top