2019இல் விளையாட மலிங்கவுக்கு ஆசை

| 15 June 2017

அண்மைக்காலமாக ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவதிப்பட்டுவரும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு, இன்னமும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

தற்போது 33 வயதான மலிங்க, முன்னைய அளவுக்குத் தனது பலம் காணப்படவில்லை என்ற போதிலும், இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

 

“33 வயதில், நான் செய்து பழக்கப்பட்ட விடயங்களை, தற்போது செய்வதற்குக் கடினப்படுகிறேன். நான் பந்துவீசும் போது ஒவ்வொரு தடவையும், விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கான ஆர்வத்தை, நான் கொண்டுள்ளேன். ஆனால், போட்டிகளை வென்று கொடுக்கக்கூடிய பந்துவீச்சாளராக, நான் இப்போது இல்லாமல் இருக்கலாம்.

 

“19 மாதங்களுக்குப் பின்னர், ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் நான் விளையாடினேன். அதற்கு முன்னர், 4 ஓவர்களுக்கு அதிகமாக நான் வீசியிருக்கவில்லை.

 

“என்னால் விளையாட முடிந்தமை குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஆனால், எனது பந்துவீச்சுக் குறித்து, எனக்குத் திருப்தி கிடையாது, ஏனென்றால், அணிக்காக, என்னால் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர்” என்று தெரிவித்தார்.

 

ஆனால், தன்னுடைய பந்துவீச்சை, லிச்த மலிங்க, குறைத்து மதிப்பிடுகிறார் என்று கூட கருத முடியும். அரையிறுதிக்குச் செல்வதற்கான போட்டியாக அமைந்த, பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டின் இரண்டு பிடிகளை, இறுதி நேரத்தில், மலிங்கவின் பந்துவீச்சில் இலங்கை அணி தவறவிட்டிருந்தது. அதேபோல், முதலாவது ஓவரிலேயே, அஸார் அலியின் பிடியெடுப்பொன்று தவறவிடப்பட்டது. அஸார் அலி, 34 மேலதிக ஓட்டங்களைப் பெற்றதோடு, சப்ராஸ் அஹமட், தனது அணிக்கான வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

 

தனது எதிர்காலம் குறித்துக் கருத்துத் தெரிவித்த மலிங்க, “இந்த வகையான போட்டிகளில், நான் இந்த அணியில் விளையாடுவதற்குப் பொருத்தமாக இருக்கும் வரை, விளையாடுவதற்கு எதிர்பார்க்கிறேன். அடுத்த உலகக் கிண்ணத்துக்காக, தேர்வாளர்கள் என்னைத் தெரிவுசெய்தால், விளையாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

scroll to top