மே.தீவுகள் தொடரில் குல்தீப் யாதவ்

| 15 June 2017

மேற்கிந்தியத் தீவுகளுக்கான இந்தியாவின் மட்டுப்படுத்த ஓவர்கள் கொண்ட போட்டித் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விக்கெட் காப்பாளரான றிஷாப் பண்ட், இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன அடங்கிய இந்தத் தொடர், இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கிறது.

 

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றிய அனேகமான வீரர்களை உள்ளடக்கிய இந்தக் குழாமில், சம்பியன்ஸ் கிண்ணத்தில் பங்குபற்றியோரில், றோகித் ஷர்மா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் மாத்திரமே இடம்பிடிக்கவில்லை.

 

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தொடருக்கான கலந்துரையாடல்களிலும், றிஷாப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோரைச் சேர்ப்பதற்கான கருத்துகள் காணப்பட்ட போதிலும், அனுபவ வீரர்களை, இந்தியா சேர்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்தத் தொடரில், இந்திய அணியின் பயிற்றுநராக, யார் செயற்படுவார் என்பது குறித்து, இன்னமும் தெளிவில்லாத நிலையே காணப்படுகிறது. தற்போதைய பயிற்றுநர் கும்ப்ளேயின் பதவிக் காலம், சம்பியன்ஸ் கிண்ணத்துடன் நிறைவுபெறுகிறது.

 

குழாம்: விராத் கோலி, ஷீகர் தவான், றிஷாப் பண்ட், அஜின்கியா ரஹானே, மகேந்திரசிங் டோணி, யுவ்ராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், டினேஷ் கார்த்திக்.

scroll to top