இந்தியாவை தோற்கடித்துச் சம்பியனானது பாகிஸ்தான்

| 18 June 2017

 

இங்கிலாந்தில் இடம்பெற்றுவந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான் சம்பியனாகியுள்ளது. ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இந்தியாவைத் தோற்கடித்தே பாகிஸ்தான் சம்பியனாகியுள்ளது.

 

இன்று (18) இடம்பெற்ற மேற்படி போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, பாகிஸ்தான் அணியை, முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அதிரடியாக ஆரம்பித்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான, ஃபக்கார் ஸமனும் அஸார் அலியும், 23 ஓவர்களில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்னர், இனிங்ஸின் நடுப்பகுதியிலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதுடன், ஐந்தாவது விக்கெட்டுக்காக, 7.3 ஓவர்களில், மொஹமட் ஹபீஸும் இமாட் வசீமும், பிரிக்கப்படாத 71 ஓட்டங்களைப் பகிர, 50 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், ஃபக்கார் ஸமான் 114 (106), அஸார் அலி 59 (71), மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 57 (37), பாபர் அஸாம் 46 (52), இமாட் வசீம் ஆட்டமிழக்காமல் 25 (21) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், புவ்னேஷ்வர் குமார், ஹர்டிக் பாண்ட்யா, கேதார் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதில் சதம் பெற்ற ஸமான், வெறும் 3 ஓட்டங்களைப் பெற்றபோது, பும்ராவின் முறையற்ற பந்தொன்றில், மகேந்திர சிங் டோணியிடம் பிடியெடுப்பொன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

339 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, மொஹமட் ஆமிரின் அபார பந்துவீச்சுக்கு எதிர்கொள்ள முடியாமல், முதலாவது ஓவரிலேயே ரோஹித் ஷர்மாவை இழந்தது. மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில், கோலி வழங்கிய பிடியெடுப்பை அஸார் அலி தவறவிட்டபோதும், அடுத்த பந்திலேயே, ஷடாப் கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஒன்பாதாவது ஓவர் முடிவில், ஷீகர் தவானையும் இழந்து, 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

பின்னர், 13ஆவது ஓவர் முடிவில் யுவ்ராஜ் சிங்கை இழந்த இந்தியா, அடுத்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே, மகேந்திர சிங் டோணியையும் இழந்து, 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதற்குப் பின்னர், ஹர்டிக் பாண்ட்யா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியபோதும், “ரண் அவுட்” முறையில் அவர் ஆட்டமிழந்ததோடு, மிகுதி விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா, 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று, 180 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

துடுப்பாட்டத்தில், ஹர்டிக் பாண்ட்யா 76 (43) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், ஹஸன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஷடாப் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

மேற்படி போட்டியில், 180 ஓட்டங்களால் இந்தியா தோல்வியடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இறுதிப் போட்டியொன்றில், அதிக ஓட்டங்களால் பெறப்பட்ட தோல்வியாக இது அமைந்தது. இதற்கு முன்னர், 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவிடம் 125 ஓட்டங்களால் இந்தியா தோல்வியடைந்தமையே, அதிக ஓட்டங்களால், சர்வதேச கிரிக்கெட் சபையின் இறுதிப் போட்டியில் பெறப்பட்ட தோல்வியாக இருந்தது.

 

இறுதிப் போட்டியின் நாயகனாக ஃபக்கார் ஸமான் தெரிவானார். தொடரின் நாயகனாக, ஹஸன் அலி தெரிவானார். இத்தொடரில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹஸன் அலி, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களுக்கான தங்கப் பந்தையும் வென்றிருந்தார். இத்தொடரில், 338 ஓட்டங்களைப் பெற்ற ஷீகர் தவான், அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களுக்கான தங்கத் துடுப்பு மட்டையை வென்றார்.

 

உலக இருபதுக்கு -20-இல் 2009ஆம் ஆண்டு சம்பியனான பாகிஸ்தான், எட்டு ஆண்டுகளின் பின்னர் உலகத் தொடரொன்றில் தற்போது சம்பியனாகியுள்ள பாகிஸ்தான், 50 ஓவர் உலகத் தொடரொன்றில், 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் வென்ற பின்னர், 25 ஆண்டுகளின் பின்னர் 50 ஓவர் உலகத் தொடரொன்றில் சம்பியனாகியுள்ளது.

 

scroll to top