சங்காவின் அதிரடி தொடர்கிறது

| 28 June 2017

 

இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

 

பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

 

மழையால் பாதிக்கப்பட்ட 2ஆவது நாளில், சரே அணி பெற்ற 142 ஓட்டங்களில் 98 ஓட்டங்களை, சங்கக்காரவே குவித்திருந்திருந்தார்.

 

இந்தப் போட்டியில் அவர் பெற்ற சதத்துடன், இந்தப் பருவகாலத்தில், 6 சதங்களை அவர் குவித்துள்ளார். மேலதிகமாக, 2 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். இதன்படி, 7 போட்டிகளில், 11 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி, 108.6 என்ற சராசரியில் 1,086 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

 

இந்தப் பருவகாலமே, முதற்தரப் போட்டிகளில் தனது இறுதிப் பருவகாலம் என அறிவித்துள்ள குமார் சங்கக்கார, மிகச்சிறப்பான ஃபோர்மை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, இப்பருவகாலத்தில் தொடர்ச்சியாக 5 சதங்களைக் குவித்த அவர், 6ஆவது சதத்தைக் குவிக்கும் வாய்ப்பை, 16 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.

 

இதைத் தவிர, ஒரு போட்டிக்கு முன்னதாக அவர், அனைத்து வகையான தொழில்முறையான போட்டிகளில், 100 சதங்களைக் கடந்திருந்தார். தற்போது அவர், 101ஆவது சதத்தையும் பெற்றுள்ளார்.

 

இப்போட்டியில் சரே அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 516 ஓட்டங்களைக் குவித்து, பலமான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

scroll to top