இங்கிலாந்து - தென்னாபிரிக்கா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

| 06 July 2017

இங்கிலாந்து, தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி, இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது.   

 

இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், இரண்டாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா, தரவரிசையில், நான்காமிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் சந்திக்கின்றது.   

 

இத்தொடரை, இங்கிலாந்து வெள்ளையடித்தால், தரவரிசையில், இரண்டாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. தவிர, இத்தொடரை வென்றால் அல்லது தொடரைச் சமப்படுத்தினாலும், தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. மறுபக்கம், இங்கிலாந்தை, தென்னாபிரிக்கா வெள்ளையடித்தாலும், தரவரிசையில், இரண்டாமிடத்திலேயே தென்னாபிரிக்கா நீடிக்கும். இங்கிலாந்தால் வெள்ளையடிக்கப்பட்டால், தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு தென்னாபிரிக்கா செல்லும்.   

 

டெஸ்ட் போட்டிகளுக்கான, இங்கிலாந்து அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அலெஸ்டயர் குக் விலகியதன் பின்னர், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவராகப் பதவியேற்றுள்ள ஜோ றூட்டுக்கு இதுவே முதல் தொடர் என்ற நிலையில், றூட்-இன் தலைமைத்துவப் பாணி அதிகம் கவனம் பெறும். இதுதவிர, தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதன் பின்னர், சாதாரண வீரராக, குக் எவ்வாறு செயற்படுவார் என்றும் நோக்கப்படுகிறது.   

 

லோர்ட்ஸில், இன்று ஆரம்பமாகும் போட்டியில், மொய்ன் அலி, லியான் டோஸன் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு களமிறங்கும் பட்சத்தில், லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியொன்றில், கடந்த 25 ஆண்டுகளில், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து களமிறங்கும் முதற்தடவையாக அமையவுள்ளது.  

 

மறுபக்கம், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளில், அண்மையான நாட்களில் தவிர்த்து வருகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பப் டு பிளெஸி, தனது மகளின் கடினமான பிரசவம் காரணமாக தென்னாபிரிக்காவிலேயே தங்கியிருக்கின்ற நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு டீன் எல்கர், தலைமை தாங்கவுள்ளார்.

 

அந்தவகையில், துடுப்பாட்ட வரிசையில், ஹஷிம் அம்லா தவிர, இளம் வீரர்களே களமிறங்கவுள்ளனர். ஆக, இங்கிலாந்து காலநிலையில், துடுப்பாட்ட வரிசை எவ்வாறு செயற்படுகின்றது என்பதைப் பொறுத்தே, தென்னாபிரிக்க அணியின் வெற்றிவாய்ப்புகள் காணப்படுகின்றன.     

scroll to top