ஷாஸ்திரியை நியமிக்க கங்குலிக்கு விருப்பமில்லை

| 12 July 2017

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக, ரவி ஷாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது நியமனத்துக்கு, அவரை நியமித்த கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான சௌரவ் கங்குலி விரும்பியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஷாஸ்திரியின் நியமனம், நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு மேலதிகமாக, பந்துவீச்சுப் பயிற்றுநராக சகீர் கானும், வெளிநாட்டுத் தொடர்களுக்கான துடுப்பாட்டப் பயிற்றுநராக ராகுல் ட்ராவிட்டும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், ஷாஸ்திரிக்கும் முன்னாள் வீரர் விரேந்தர் செவாக்குக்கும் இடையில், பயிற்றுநர் பதவிக்காக அதிக போட்டி காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில், அணித்தலைவர் விராத் கோலியின் உயர்ந்த சிபாரிசு காரணமாகவே, ஷாஸ்திரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இதில், கங்குலிக்கும் ஷாஸ்திரிக்கும் இடையில், இதற்கு முன்னர் முரண்பாடுகள் காணப்பட்டிருந்த பின்னணியில், அவரை நியமிப்பது குறித்து, பெரிதளவிலான விருப்பத்தை, கங்குலி கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அணியின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என, கிரிக்கெட் ஆலோசனைச் செயற்குழுவின் ஏனைய உறுப்பினர்களான சச்சின் டென்டுல்கர், வி.வி.எஸ். லக்‌ஷ்மன் ஆகியோர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கு மத்தியில், பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க ஷாஸ்திரி விரும்பி, பாரத் அருணுக்குப் பதிலாக, கங்குலியின் விருப்பமான சகீர் கான் நியமிக்கப்பட்ட பின்னரே, ஷாஸ்திரியை நியமிக்க, கங்குலி ஒப்புக் கொண்டார் என்று, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

scroll to top