இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா: 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

| 14 July 2017

இங்கிலாந்து, தென்னாபிரிக்கா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, நொட்டிங்ஹாமில், இலங்கை நேரப்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   

 

முதலாவது போட்டியில், இலகுவான வெற்றியை இங்கிலாந்து பெற்ற நிலையில், அழுத்தத்துக்கு மத்தியிலேயே, இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா களமிறங்கவுள்ளது.   

 

எவ்வாறெனினும், தனது முதலாவது குழந்தையின் கடினமான பிறப்புக் காரணமாக, முதலாவது போட்டியைத் தவறவிட்ட, தென்னாபிரிக்க அணியின் வழமையான அணித்தலைவர் ஃபப் டு பிளெஸி, அணிக்குத் திரும்பியிருப்பது, அவ்வணிக்கு உத்வேகத்தை வழங்கலாம்.   

 

ஆயினும், ஒரு போட்டித் தடையை எதிர்கொண்டுள்ள, தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கஜிஸ்கோ றபடா, இப்போட்டியைத் தவறவிடவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக, ஏறத்தாழ அவர் போன்றே பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளரான டுவன்னே ஒலிவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குழாமில், வேகப்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களான கிறிஸ் மொறிஸ், அன்டிலி பெக்லுவாயோ ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

இந்நிலையில், துடுப்பாட்டப் பக்கம், டு பிளெஸி அணிக்குள் வருகையில், அண்மையில் ஓட்டங்களைப் பெறத்தடுமாறிவரும் ஜே.பி டுமினியா அல்லது இளம் வீரர் தெனுயுஸ் டி ப்ரூனா அணியிலிருந்து வெளியேறுவர் என்பது தெளிவில்லாமல் உள்ளது. டு பிளெஸிக்குக்காக குழாமில் கொண்டுவரப்பட்ட ஏய்டன் மர்க்ரமும் குழாமில் தொடருகின்ற நிலையில், மிகுந்த அழுத்தத்தில் டுமினி காணப்படுகின்றார்.   

 

இங்கிலாந்து அணி, மொய்ன் அலியின் சகலதுறை ஆட்டத்தாலும் புதிய அணித்தலைவர் ஜோ றூட்டின் சிறப்பான துடுப்பாட்டத்தாலும் முதலாவது போட்டியை இலகுவாக வெற்றிகொண்டபோதும், கரி பலன்ஸ், கீட்டன் ஜெனிங்ஸ் ஆகியோரிடமிருந்து மேலதிக ஓட்டங்களை எதிர்பார்க்கும்.   

 

பந்துவீச்சுப் பக்கம், உபாதைக்குள்ளான கிறிஸ் வோக்ஸ், ஜேக் போல் ஆகியோர் பயிற்சிக்குத் திரும்பியுள்ள நிலையில், பெறுபேற்றை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் மார்க் வூட் உள்ளார்.     

scroll to top