போராடுகிறது இலங்கை; முன்னிலையில் சிம்பாப்வே

| 17 July 2017

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான, ஒற்றை டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் முடிவில், மிகப்பெரிய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, குசல் மென்டிஸின் சிறப்பான துடுப்பாட்டத்தோடு, போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், சிம்பாப்வே அணி, முன்னிலையைக் கொண்டுள்ளது.

 

சிம்பாப்வே அணியால் வழங்கப்பட்ட 388 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய நாள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.

 

முதலாவது விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களைப் பகிர்ந்த இலங்கை அணி, 2ஆவது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தது. 3ஆவது விக்கெட்டுக்காக, 25 ஓட்டங்கள் மாத்திரமே பகிரப்பட்ட நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் என்ற தடுமாற்றமான நிலையில் காணப்பட்டது. ஆனால், இளம் வீரர் குசல் மென்டிஸும் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸும், பிரிக்கப்படாத 37 ஓட்டங்களைப் பகிர்ந்து, இலங்கை அணிக்குப் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தினர்.

 

இதன்படி, 7 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 218 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில், இலங்கை அணி காணப்படுகிறது.

 

துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ், ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, திமுத் கருணாரத்ன 48, உபுல் தரங்க 27, அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட அணித்தலைவர் கிறேம் கிறீமர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

முன்னதாக, 6 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த சிம்பாப்வே அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றது.

 

சீகன்டர் ராஸா, தனது கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்து, 127 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, மல்கொம் வோலர் 68, கிறேம் கிறீமர் 48, பீற்றர் மூர் 40 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

டெஸ்ட் போட்டிகளில் தனது 31ஆவது 5 விக்கெட் பெறுதியைப் பெற்ற ரங்கன ஹேரத், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், போட்டியில் தனது 10 விக்கெட்டுகளையும் அவர் பூர்த்திசெய்தார். இது, அவர் கைப்பற்றும் 8ஆவது 10 விக்கெட் பெறுதியாகும். தவிர, டில்ருவான் பெரேரா, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

போட்டியின் 5ஆவது நாள் இன்றாகும்.

scroll to top