இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன

| 01 August 2017

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையே, கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக் குழாமில், துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன இடம்பெற்றுள்ளார். இறுதியாக, 13 மாதங்களுக்கு முன்பே, இலங்கை அணிக்காக திரிமான்ன விளையாடியிருந்தார்.

 

இதேவேளை, இடது கை சுழற்பந்து வீச்சாளரான லக்‌ஷன் சந்தகானும் குழாமும் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில், முதுப் பகுதி உபாதை காரணமாக, சுரங்க லக்மால் குழாமில் இடம்பெறவில்லை.

 

காயமடைந்த அசேல குணரட்னவுக்குப் பதிலீடு போன்றே குழாமில் இடம்பெற்றுள்ள திரிமான்ன அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதொன்றாகவே உள்ளது.

 

ஏனெனில், நியூமோனியா காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அணிக்குத் திரும்புகின்ற நிலையில், திரிமான்ன யாரைப் பிரதியீடு செய்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

ஒருவேளை, அனுபவத்தை அணி நிர்வாகம் கருத்திற் கொண்டால், டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தை முதலாவது டெஸ்டில் மேற்கொண்ட தனுஷ்க குணதிலகவைப் பிரதியீடு செய்வார். எனினும் ஒரு போட்டியுடன் தனுஷ்க குணதிலக அணியிலிருந்து நீக்கப்படுவாரா என்பது சந்தேகமானதாகும். இதுதவிர, சுழற்பந்து வீசக்கூடிய துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வாவும் ஏற்கெனவே குழாமில் காணப்படுகின்றார்.

 

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதற் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

 

குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மத்தியூஸ், உபுல் தரங்க, டிமுத் கருணாரட்ன, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, நுவான் பிரதீப், ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, மலிந்த புஷ்பகுமார, லக்‌ஷன் சந்தகன், லஹிரு திரிமான்ன

scroll to top