நான்காவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கிறது

| 03 August 2017

 

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி, மன்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில், இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நாளை ஆரம்பமாகவுள்ளது.

 

இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்ற இங்கிலாந்து, அடுத்த போட்டியில் படு தோல்வியடைந்து, தொடர்ந்து மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. எனினும் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றபோது, அவ்வணியிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

மறுபக்கம், வேர்ணன் பிலாந்தரின் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணியில், டீன் எல்கர் தவிர அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிக்கத் தவறியுள்ளனர். சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லா, அணித்தலைவர் பப் டு பிளெஸி ஆகியோரிடமிருந்து குறிப்பிடத்தக்க ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி எதிர்பார்த்திருக்கிறது. தெம்பா பவுமா ஓரளவு ஓட்டங்களை பெறுகின்ற நிலையில், அவரிடமிருந்து பெரிய ஓட்ட எண்ணிக்கையை எதிர்பார்த்திருக்கிறது.

 

இத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹெனியோ குஹுன், எந்தவொரு இனிங்ஸ்களிலும் சொல்லிக் கொள்ளும் படியாக ஓட்டங்களைப் பெறவில்லை. இப்போதைக்கு இவரின் இடத்துக்கு ஆபத்து இல்லையென்றாலும், தொடர்ந்தும் ஓட்டங்களைப் பெறத் தடுமாறுமிடத்து, குஹுனின் இடம், குழாமில் மேலதிகமாக இடம்பெற்றிருக்கும் இளம் வீரரான ஹெய்னியோ குஹுனுக்குப் போனால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

 

இங்கிலாந்து அணியில், கடந்த போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட டேவிட் மலன் இரண்டு இனிங்ஸ்களிலும் ஓட்டங்களைப் பெறாதபோதும், இப்போட்டியிலும் அவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, அணியில் பெரும்மாலும் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

தென்னாபிரிக்க அணியிலும் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும், சில வேளைகளில், கிறிஸ் மொரிஸுக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர் தெனியுஸ் டி ப்ரூன் குழாமில் இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது.

scroll to top