தொடரை வென்றது இங்கிலாந்து

| 07 August 2017

 

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற ரீதியில் இங்கிலாந்து வென்றுள்ளது. ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியை 177 ஓட்டங்களால் வென்றமையைத் தொடர்ந்தே, 3-1 என்ற ரீதியில் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

 

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து, தமது முதலாவது இனிங்ஸில் 362 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 99, பென் ஸ்டோக்ஸ் 58, அணித்தலைவர் ஜோ றூட் 52, அலிஸ்டியர் குக் 46 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸ்கோ றபடா 4, மோர்னி மோர்கல், கேஷவ் மஹராஜ், டுவன்னே ஒலிவர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து, தமது முதலாவது இனிங்ஸில் 226 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தெம்பா பவுமா 46 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன் 4, ஸ்டுவேர்ட் ப்ரோட் 3, மொயின் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொயின் அலி ஆட்டமிழக்காமல் 75, ஜோ றூட் 49 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மோர்னி மோர்கல் 4, டுவன்னே ஒலிவர் 3, கஜிஸ்கோ றபாடா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இதனையடுத்து, 380 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹஷிம் அம்லா 83, பப் டு பிளெஸி 61 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொயின் அலி 5, ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாகவும் இங்கிலாந்தின் தொடர் நாயகனாகவும் மொயின் அலி தெரிவானதோடு, தென்னாபிரிக்க அணியின் தொடர் நாயகனாக மோர்னி மோர்கல் தெரிவானார்.

scroll to top