பல்லேகல போட்டியிலிருந்து ஹேரத்துக்கு ஓய்வு

| 08 August 2017

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையே இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதுகுப் பகுதியில் உபாதையை எதிர்நோக்கியமையைத் தொடர்ந்து, பல்லேகலயில், எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான ரங்கன ஹேரத்துக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.

 

ஹேரத்துக்கு காயம் இல்லை என்றபோதும், கடந்த மூன்று வாரங்களில், அதிக ஓவர்களை ஹேரத் வீசியுள்ளார். சிம்பாப்வேக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் 71 ஓவர்களை வீசிய ஹேரத், இந்திய அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 91 ஓவர்களை வீசியுள்ளார்.

 

இந்நிலையிலேயே, 39 என்ற ஹேரத்தின் வயதையும் அடுத்த இரண்டு மாதங்களில், பாகிஸ்தானுக்கெதிராக டெஸ்ட் தொடரொன்றில் இலங்கை விளையாடவுள்ள நிலையிலேயே, இவற்றைக் கருத்திற் கொண்டு, பல்லேகல போட்டியில் ஹேரத்தை தேர்வாளர்கள் தவிர்த்துள்ளனர்.

 

இதேவேளை, அணியுடன் கண்டிக்குச் செல்லாமல், கொழும்பிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளதை ஹேரத்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இந்தியாவுக்கெதிரான இத்தொடரில், சிறப்பான தொடரொன்றை, ஹேரத் இதுவரையில் கொண்டிருக்காதபோதும், ஹேரத் இல்லாமல், இலங்கையின் பந்துவீச்சு வரிசை பலவீனமானதாகவே காணப்படப்போகின்றது.

 

ஹேரத் இல்லாத நிலையில், சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளரான டில்ருவான் பெரேரா விளங்கவுள்ள நிலையில், இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான, மலிந்த புஷ்பகுமார, லக்‌ஷான் சந்தகான் ஆகியோர் குழாமில் காணப்படுகின்றனர்.

 

இறுதியாக, இரண்டாண்டுகளுக்கு முன்பதாக, அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, 2015ஆம் ஆண்டு ஜூலையிலேயே, இலங்கையின் டெஸ்ட் போட்டியொன்றை ஹேரத் தவறவிட்டிருந்தார்.

 

அந்தவகையில், ஏற்கெனவே காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், ஹேரத்துக்குப் பதிலாக, இரண்டு வீரர்களை குழாமில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

scroll to top