'சமூக ஊடகத்தள விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்'

| 08 August 2017

 

அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

 

இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

 

அதன்போது கருத்துத் தெரிவித்த அரவிந்த டி சில்வா, நம்பிக்கையுடன் காணப்பட வேண்டுமெனவும், தங்களுக்கான பலத்தின் அடிப்படையில் விளையாட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அத்தோடு, இளைய வீரர்களை, திறமையிலும் திறன்களிலும் கவனம் செலுத்துமாறும், சமூக ஊடக இணையத்தளங்கள் மூலமாகவும் "கொசிப்" இணையத்தளங்கள் மூலமாகவும் அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்யும் தரப்பினர் காரணமாக நம்பிக்கையிழக்க வேண்டாமெனவும் கூறினார். இது, அண்மைக்காலத்தில் இலங்கை அணி மீது அதிகரித்துள்ள அழுத்தத்தை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.

 

குறிப்பாக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்திய அணித் தலைவர் விராத் கோலியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்ததோடு, "அடுத்த டெஸ்டில், இலங்கை மீது சிறிது மென்மையாகச் செயற்படுமாறு, விராத் கோலியிடம் தெரிவித்தேன். 600 [ஓட்டங்கள்] என்பது சிறிது அதிகமானது" என்று குறிப்பிட்டிருந்ததார். இலங்கை அணிக்கெதிராக, இந்திய அணி, தொடர்ச்சியாக 600 ஓட்டங்களைப் பெற்று வருவதையே, அவர் அவ்வாறு சுட்டிக்காட்டினார்.

 

அவர் அதை நகைச்சுவைக்காகவே பகிர்ந்திருந்தாலும், சமூக ஊடக இணையத்தளங்களில், இலங்கை அணி, எந்தளவுக்குக் கேலியை எதிர்கொள்கிறது என்பதை, அந்தப் பகிர்வு வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தான், சமூக ஊடக இணையத்தளங்களைக் கணக்கிலெடுக்க வேண்டாம் என்ற அறிவுரை, வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

scroll to top