மூன்றாவது டெஸ்ட் நாளை

| 11 August 2017

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, பல்லேகலவில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணிம் 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ள நிலையில், குறித்த போட்டியின் முடிவு, இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதைப் பாதிக்காது என்பதுடன், டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையிலும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

குறித்த போட்டியில் என்ன முடிவு பெறப்பட்டாலும், முதல்நிலை அணியாக இந்தியா தொடரவுள்ளதோடு, ஏழாம் நிலை அணியாக இந்தியா தொடரவுள்ளது.

 

எவ்வாறெனினும், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இனிங்ஸில், டிமுத் கருணாரட்ன, குசல் மென்டிஸ் ஆகியோரின் சதங்களுடன் ஓரளவான பெறுபேற்றை வெளிப்படுத்திய இலங்கை அணிக்கு, அதன் தொடர்ச்சியை மீண்டும் வெளிப்படுத்தி, அணியை முன்னோக்கி நகர்த்துவதற்கு, இப்போட்டியிலும் பெறுபேற்றை வெளிப்படுத்துவது அவசியமானதொன்றாக காணப்படுகிறது.

 

இப்போட்டியிலிருந்து, இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான ரங்கன ஹேரத்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேரத்தின் இடத்தை, ஏறத்தாழ அவரை மாதிரியான பந்துவீச்சுப் பாணியைக் கொண்ட மலிந்த புஷ்பகுமார நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கையிலுள்ள ஆடுகளங்களில், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளமாக பல்லேகல விளங்குவதால், விக்கெட்டுகளைக் கைப்பற்றக் கூடிய சுழற்பந்துவீச்சாளரே தெரிவாக இருந்தால், லக்‌ஷன் சந்தகான் அணியில் இடம்பெறுவார்.

 

மறுபக்கம், இலங்கை அணி சார்பாக சிறப்பாகச் செயற்பட்ட வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் காயமடைந்துள்ள நிலையில், லஹிரு குமாரவும் விஷ்வ பெர்ணான்டோவும் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை அமைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய அணியின் முக்கியமான வீரரான இரவீந்திர ஜடேஜா, தடை காரணமாக, இப்போட்டியில் பங்குபற்ற முடியாமல் போயுள்ள நிலையில், ஏற்கெனவே குழாமில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்வே அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக் கொள்ளபட்ட, ஏறத்தாழ அவரைப் போன்ற அக்ஸார் பட்டேல், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

scroll to top