‘திட்டப்படி எதுவும் நடக்கவில்லை’

| 28 August 2017

இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தாங்கள் வகுத்த திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என, அப்போட்டியில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட சாமர கப்புகெதர தெரிவித்துள்ளார்.

 

பல்லேகெலவில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. லஹிரு திரிமான்ன மாத்திரம் போராடி, 80 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியாவின் பும்ரா, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இந்திய அணி பதிலளித்தாடும் போது, 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களுடன் சிறிதளவு தடுமாறிய போதிலும், றோகித் ஷர்மாவின் சதம், மகேந்திரசிங் டோணியின் அரைச்சதம் ஆகியவற்றின் உதவியுடன், 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

தோல்வி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கப்புகெதர, “எங்கள் திட்டங்களுக்கேற்ப விடயங்கள் நடக்கவில்லை. மத்திய ஓவர்களில், ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளை அதிகம் விளையாடாமலிருக்கத் திட்டமிட்டோம். ஆனால், சரிவர நடக்கவில்லை. 260 தொடக்கம் 275 வரையான ஓட்டங்கள், சவால்மிக்க ஓட்டங்களாக அமைந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

 

வழக்கமான தலைவர் உபுல் தரங்கவுக்கு விதிக்கப்பட்ட 2 போட்டித் தடையைத் தொடர்ந்து, இந்தப் போட்டியில், முதன்முறையாக அணித்தலைமைப் பொறுப்பை ஏற்ற கப்புகெதர, தலைமைத்துவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, “அணித்தலைமையை மகிழ்வாக உணர்ந்தேன். அழுத்தமாக இருந்தது, ஆனால் அதை நான் மகிழ்வுடன் அனுபவித்தேன். அடுத்த போட்டியில், நாங்கள் வெற்றிபெற முடியுமென நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

ஏற்கெனவே, உபுல் தரங்க இல்லாமலுள்ள இலங்கை அணி, டெஸ்ட் அணியின் தலைவர் டினேஷ் சந்திமால், இப்போட்டியில் விரல் முறிவுக்கு உள்ளாகி, இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுவதும் பங்குபற்ற முடியாமல் போனதைத் தொடர்ந்து, அதிகரித்த அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

 

ஆனால், 3-0 என்ற கணக்கில் இந்தத் தொடரில், அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த போட்டிகளில், புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான நிலையிலாவது, இலங்கை அணி, வெற்றியைப் பெற்றுக் கொள்ளுமா என, இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

scroll to top