துடுப்பாட்டம் குறித்து உபுல் தரங்க ஏமாற்றம்

| 04 September 2017

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இழந்தமை குறித்துத் தனது வருத்தத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க, இலங்கையின் துடுப்பாட்டம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

 

இந்தத் தொடரில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் என்ன வித்தியாசத்தை அவர் உணர்ந்தார் என்று கேட்கப்பட்டபோது, “தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த நாம் தவறியிருந்தோம். நாங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருக்கவில்லை. நாங்கள் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை. நாங்கள் சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. தொடரில் நாங்கள், முற்றுமுழுதாகத் தோற்கடிக்கப்பட்டோம்.

 


“துடுப்பாட்டம் குறித்து ஏமாற்றமடைகிறேன். இந்திய அணி, தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தியது. பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறத் தவறினோம்” என்று தெரிவித்தார்.
துடுப்பாட்ட வரிசையாக, இலங்கை அணி சிறப்பாகச் செயற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், 5 போட்டிகளின் பின்னரும் ஒரு தடவை தானும் 250 ஓட்டங்களைப் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

 

இந்தத் தொடரில், இலங்கை அணி வெள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதற்குத் திட்டமிடுகிறாரா எனக் கேட்கப்பட்ட போது, அதற்கான தேவை கிடையாது என்று அவர் தெரிவித்ததோடு, அடுத்த கட்டமாக எவ்வாறு முன்னேறிச் செல்வது என்பதை, தேர்வாளர்களே முடிவுசெய்வர் என்று குறிப்பிட்டார்.

 

இதேவேளை, அடுத்த 6 மாதங்களுக்கு, டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை என, உபுல் தரங்க, இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனஞ்செலுத்துவதற்காகவே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கருதப்படுகிறது.

 

scroll to top