இலங்கைக்குக் கிடைக்குமா ஆறுதல் வெற்றி?

| 05 September 2017

இலங்கை அணி, இலங்கையில் வைத்து, மொத்தமாக 9 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் போது, அதன் 9ஆவது போட்டி வரை அவ்வணிக்கு வெற்றி கிடைக்காது எனவும், 9ஆவது போட்டியாலாவது ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளுமா என இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என யாராவது கூறியிருந்தால், அது கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டிருக்கும்.

 

ஆனால், இந்திய அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளையும் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் தோற்றுள்ள இலங்கை, ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புத் தான், இலங்கை இரசிகர்களுக்கு உள்ளது.

 

இன்று இடம்பெறவுள்ள போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

எந்த அணியை விளையாடினாலும், என்ன மாற்றங்களை ஏற்படுத்தினாலும், இந்திய அணிக்குச் சவாலை வழங்குவதற்கு, இலங்கை அணி தடுமாறியிருந்தது.

 

இலங்கை அணியின் தடுமாற்றங்கள், பாரிய குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்னதாக, இருபதுக்கு-20 குழாமும் இலங்கையால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, மீண்டுமொரு குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய குழாமில், ஜெப்றி வன்டர்சே, தசுன் ஷானக, அகில தனஞ்சய, வனிது ஹஸரங்க, திஸர பெரேரா, மிலிந்த சிரிவர்தன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை அணி, இலங்கையில் வைத்து, இந்தியாவுக்கெதிராக ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை, முன்னைய காலங்களில் வெளிப்படுத்திய போதிலும், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், இதுவரை பிரகாசிக்கவில்லை. இதுவரை, இரண்டு போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

 

ஆகவே, ஏற்கெனவே அழுத்தத்தில காணப்படும் இலங்கை அணி, இந்தப் போட்டியில் எவ்வாறு விளையாடும் என்பதே, தற்போதைய கேள்வியாக உள்ளது.

 

scroll to top