தொடரை வென்றது இங்கிலாந்து

| 09 September 2017

 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை 9 விக்கெட்டுகளால் வென்ற இங்கிலாந்து, மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை, 2-1 என்ற ரீதியில் வென்றது.

 

லோட்ஸில் இடம்பெற்ற இந்த மூன்றாவது டெஸ்டில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், கிரண் பவல் 39, ஷை ஹோப் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 60, ஸ்டுவேர்ட் ப்ரோட் 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேமார் றோச் 5, அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், சகல விக்கெட்டுகளையும் இழந்து 177ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷை ஹோப் 62, கிரண் பவல் 45 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

அந்தவகையில், 107 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

 

இப்போட்டியின் நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவானதோடு, இத்தொடரின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நாயகனாக ஷை ஹோப் தெரிவானதோடு, இங்கிலாந்து அணியின் நாயகனாக ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவானார்.

scroll to top