சம்பியனானது ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ்

| 10 September 2017

 

மேற்கிந்தியத் தீவுகளின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான கரீபியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் கெவோன் கூப்பர் அதிரடி காட்ட ட்ரின்பாகோ றைட் றைடர்ஸ் சம்பியனானது.

 

இலங்கை நேரப்படி, இன்று காலை இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணியின் தலைவர் டுவைன் பிராவோ, சென். கிட்ஸ் அன்ட் நெவிஸ் பற்றியோட்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றியோட்ஸ், தமது இனிங்ஸின் இறுதி ஓவர்களில், கார்லோஸ் பிறத்வெய்ட், மொஹமட் நபி ஆகியோர் அதிரடியாகப் பெற்ற ஓட்டங்கள் காரணமாக, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து, ஓரளவு நிதானமான 135 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், கார்லோஸ் பிறத்வெய்ட் ஆட்டமிழக்காமல் 30 (25), ஜொனதன் கார்ட்ட்டர் 21 (30), பிரெண்டன் கின் 19 (21) மொஹமட் நபி ஆட்டமிழக்காமல் 18 (05), டெவொன் தோமஸ் 17 (09), எவின் லூயிஸ் 16 (16) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கெவோன் கூப்பர், ஜெவோன் சியேர்ள்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுனில் நரைன், றொன்ஸ்ஃபோர்ட் பீட்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 136 ஓட்டங்களை என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய நைட்றைடர்ஸ், ஒரு கட்டத்தில், 90 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 13 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெறவேண்டி இருந்தபோதும் கெவோன் கூப்ப்பரின் அதிரடி காரணமாக 19 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

 

துடுப்பாட்டத்தில், கெவோன் கூப்பர் ஆட்டமிழக்காமல் 29 (14), கொலின் மன்றோ 29 (23), டினேஷ் ராம்டீன் ஆட்டமிழக்காமல் 26 (31) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஹபீஸ், தப்ரையஸ் ஷம்சி, ஷெல்டன் கோட்ரல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இறுதிப் போட்டியின் நாயகனாக, கெவோன் கூப்பர் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக சட்விக் வோல்டன் தெரிவானார்.

scroll to top