சுதந்திரக் கிண்ணம் இன்று ஆரம்பிகிறது

| 12 September 2017

 

பாகிஸ்தான், உலகப் பதினொருவர் அணிகளுக்கிடையிலான மூன்று இருபதுக்கு-20 போட்டிகளைக் கொண்ட சுதந்திரக் கிண்ணத் தொடர், லாகூரின் கடாபி அரங்கில், இலங்கை நேரப்படி, இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

 

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சர்வதேச அணிகள் செல்லாத நிலையில், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வே மட்டும் சென்றிருந்ததுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டி இவ்வாண்டு லாகூர் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போட்டியில் சில சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

 

இந்நிலையிலேயே, சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தானுக்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே, குறித்த சுதந்திரக் கிண்ணத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இத்தொடரில், இங்கிலாந்து, அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், இலங்கை அணி வீரர்கள், உலகப் பதினொருவர் அணிக்காக விளையாடவுள்ளனர். உலகப் பதினொருவர் அணி, தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட், இருபதுக்கு சர்வதேசப் போட்டிகளுக்கான தலைவர் பப் டு பிளெசியால் தலைமை தாங்கப்படுவதோடு, ஹஷிம் அம்லா, டரன் சமி, போன்றோரை உள்ளடக்கியுள்ளது.

 

இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் குழாம், ஹஸன் அலி, மொஹமட் ஆமிர் எனப் பலமான வேகப்பந்து வீச்சு வரிசையைக் கொண்டிருப்பதுடன், ஷடாப் கான், மொஹமட் நவாஸ், இமாட் வசீம் என திறமையான சுழற்பந்துவீச்சாளர்களையும் கொண்டிருக்கின்றது. ஆக, அண்மைய வரவான பக்கார் ஸமனின் அதிரடியோடு, ஷோய்ப் மலிக், அணித்தலைவர் ஷப்ராஸ் அஹமட் ஆகியோரின் அனுபவம் கைகொடுக்கும் சந்தர்ப்பத்தில், உலகப் பதினொருவர் அணியை இலகுவாக வீழ்த்தக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.

 

எவ்வாறெனினும், இத்தொடரின் முடிவுகளைத் தாண்டி, எவ்விதத் தடங்கலுமின்றி இத்தொடர் முழுமையாக நடைபெறுமிடத்து, அடுத்த மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி உட்பட வேறு சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

scroll to top