3 அணிகளினதும் தலைவராக டு பிளெஸி

| 12 September 2017

 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி அணிகளின் தலைவரான ஃபப் டு பிளெஸி, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தென்னாபிரிக்காவின் 3 வகையான போட்டிகளின் தலைவராகவும் அவர் செயற்படவுள்ளார்.

 

இதுவரை காலமும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவராகக் காணப்பட்ட ஏபி டி வில்லியர்ஸ், அண்மையில் அப்பதவியிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே, ஃபப் டு பிளெஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

2013ஆம் ஆண்டிலிருந்து இருபதுக்கு-20 சர்வதேச அணியின் தலைவராகச் செயற்பட்டுவரும் டு பிளெஸி, டெஸ்ட் அணியின் தலைவராக, கடந்தாண்டு ஓகஸ்டில் நியமிக்கப்பட்டார்.

 

அடுத்த உலகக் கிண்ணத்துக்கு, இன்னமும் 20 மாதங்களே உள்ள நிலையில், அந்த உலகக் கிண்ணத்தில், தென்னாபிரிக்க அணிக்குத் தலைமை தாங்குபவராக, டு பிளெஸியே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தென்னாபிரிக்காவின் அடுத்த தொடர், பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெறவுள்ளது. இத்தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன. எனவே, 3 வகையான போட்டிகளுக்கும், இத்தொடரிலிருந்தே அவர் தலைமை தாங்க ஆரம்பிக்கவுள்ளார்.

 

டு பிளெஸியின் நியமனம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட், "உலக கிரிக்கெட்டில், மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவராக, அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, பாகிஸ்தானில் வைத்து இருபதுக்கு-20 தொடரில் விளையாடிவரும் உலக பதினொருவர் அணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டமையிலிருந்து வெளியாகிறது" எனத் தெரிவித்தார்.

 

தென்னாபிரிக்க அணியின் புதிய பயிற்றுநராக, ஒட்டிஸ் கிப்ஸன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைவர், புதிய பயிற்றுநர் ஆகியவற்றுடன், தென்னாபிரிக்க அணி, அடுத்த உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களை ஆரம்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top