லாகூரும் பாகிஸ்தானும் களைகண்டன

| 13 September 2017

 

சுதந்திரக் கிண்ணத்துக்காக, உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், நேற்று ஆரம்பித்த நிலையில், போட்டி நடைபெறும் லாகூர் மாத்திமல்லாது, முழு பாகிஸ்தானுமே, களைகட்டியிருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

 

2009ஆம் ஆண்டில், இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், பிரதானமான அணிகள், பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு மறுத்துவந்த நிலையில், உள்ளூரில் போட்டிகள் இல்லாமல், பாகிஸ்தான் இரசிகர்கள் வாடியிருந்தனர். இந்நிலையில், உலக பதினொருவர் அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களுக்கு, விசேட மரியாதையும் வழங்கப்பட்டது.

 

போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, பாபர் அஸாமின் 86 (52), அஹமட் ஷெஷாத்தின் 39 (34), ஷொய்ப் மலிக்கின் 38 (20) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த 197 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் திஸர பெரேரா, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், 4 ஓவர்களில் 51 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

 

பதிலளித்தாடிய உலக பதினொருவர் அணி சார்பாக, எந்தவொரு வீரரும் 30 ஓட்டங்களைப் பெறாத நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று, 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் டெரன் சமி ஆட்டமிழக்காமல் 29 (16), ஃபப் டு பிளெஸி 29 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சொஹைல் கான், றும்மன் றயீஸ், ஷடாப் கான் ஆகியோர், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின்ந நாயகனாக, பாபர் அஸாம் தெரிவானார்.

scroll to top